சிரியாவில் இரட்டை கார் குண்டு வெடிப்பில் 26 பேர் பலி
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்வைதா நகரில் டிரூஸ் என்னும் சிறுபான்மையினர் போராடி வருகின்றனர். சிரியாவில் மட்டும் 5 லட்சம் டிரூஸ் இனத்தவர் வசிக்கின்றனர். இந்த இனத்தின் தலைவர்களில் ஷேக் வாத் அல்-பலோஸ் பலம் வாய்ந்தவர் ஆவார். தனது இனத்துக்கென்று ஒரு போராளிக் குழுவை உருவாக்கி இவர் ஸ்வைதா நகரின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
இவரைக் கொல்வதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமுறை முயற்சி மேற்கொண்டனர். எனினும் அது பலிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்வைதா நகருக்கு வெளியே அல்-பலோஸ் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய காரில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில் அல்-பலோசும் அவருடன் சென்றவர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே சிரியாவின் தகிர் அல்-ஜபால் நகரில் ஒரு மருத்துவமனை அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்தன.
அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த 2 கார் குண்டுகள் வெடிப்பு தாக்குதல்களிலும் மொத்தம் 26 பேர் பலியானதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தாகவும் சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு மையத்தின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply