ஈராக்கில் 130 சிறுவர்கள் கடத்தல்: மனித வெடிகுண்டுகளாக மாற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் பயிற்சி

isisஈராக் மற்றும் சிரியா நாடுகளில் சில பகுதிகளை கைப்பற்றி அங்கிருக்கும் மக்களை வாட்டி, வதைத்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் மோசூல் நகரில் இருந்து சுமார் 130 சிறுவர்களை கடத்திச் சென்று அவர்கள் அனைவரையும் மனித வெடிகுண்டுகளாக மாற்ற பயிற்சி அளித்து வருவதாக ஈராக் அரசின் குர்த் இனத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் கடத்திச் செல்லப்பட்ட இந்த சிறுவர்கள் 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டு, இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திவரும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மனித வெடிகுண்டுகளாக மாறி பொது இடங்களில் பெரும் சேதம் ஏற்படுத்துவது, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதப் பயிற்சியில் அந்த சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குர்திஸ்தான் குடியரசு கட்சியின் செய்தி தொடர்பாளர் சயீத் மமவுஸினி என்பவர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட தீவிரவாத பயிற்சி முகாமில் இருந்து தப்பியோடி வந்த ஒரு சிறுவன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தான். பயிற்சியின்போது, ஒரு ராணுவ வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துமாறு ஐ.எஸ். தீவிரவாதிகள் என்னை வற்புறுத்தினர்.

‘போ,போ, தாக்கு.., உனக்காக சொர்க்கம் காத்திருக்கிறது’ என்று அவர்கள் ஆவேசமாக கூச்சலிட்டனர். அந்த சொர்க்கம் காத்திருப்பது உண்மையானால், நீங்கள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு சொர்க்கத்துக்குப் போய் சேரவேண்டியதுதானே? என்னை ஏன் தாக்குதல் நடத்த சொல்கிறீர்கள்? என்று நான் அவர்களை கேட்க நினைத்தேன் என அந்த பேட்டியின்போது தப்பியோடிவந்த சிறுவன் கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply