சகலரும் ஏற்கக் கூடிய உள்ளக விசாரணை விரைவில் ஆரம்பம்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் எதுவும் நடத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் மாத்திரமே நடத்தப்படும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட ருவன் விஜேவர்தன நேற்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இடம்பெற்ற எளிமை யான நிகழ்விற்கு பின்னர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிலர் சர்வதேச விசாரணைகள் தேவை என்று வலியுறுத்தி வருகின்றனர். என் னைப் பொறுத்த மட்டில் சர்வதேச விசாரணை ஒன்று தேவையில்லை. மாறாக சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளக விசாரணை வெகு விரைவில் நடத்தப்படும்.
இது தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
கடமையேற்பு நிகழ்வில் உரையாற்றிய அவர்,
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி அதனை மேலும் பலப்படுத்துவதே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்து வம் வழங்கும் அதேசமயம், இந்த பொறுப்பு வாய்ந்த பதவியின் ஊடாக தாய் நாடும் மக்களும் நன்மையடையும் வகையில் தனது சேவைகளை தொடர்ந் தும் நான் முன்னெடுத்துச் செல்லவுள்ள தாக குறிப்பிட்ட அவர், தாய் நாட்டிற்காக அர்ப்பணிப்புக்களுடன் சேவையாற்றிய முப்படை வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்பு படைகளின் தளபதியுமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர் தன இங்கு மேலும் உரையாற்றுகையில்,
மிகவும் பொறுப்பு மிக்கதும் முக்கியமானதுமான அமைச்சு பொறுப் பிற்கு தன்னை மீண்டும் நியமித்தமை யிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நான் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு ஆசீர்வதித்தமை நான் பெற்ற பாக்கியமாகும்.
இந்த பொறுப்பு வாய்ந்த பதவியின் ஊடாக தாய் நாடும் மக்களும் நன்மை யடையும் வகையில் எனது சேவைகளை தொடர்ந்தும் நான் முன்னெடுத்துச் செல்வேன். அதேபோன்று தாய் நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் நன்மைகளை கருதி தொடர்ந்தும் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
அதேபோன்று, பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்திற் கொண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்ட விசேட அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டின் நலன், முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன. எனவே எவராக இருந்தாலும் சட்டவிதி முறைகளுக்கு அமைய அர்ப்பணிப்புக்களுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் ருவன் விஜேவர்தன இதன் போது கேட்டுக் கொண்டார்.
அத்துடன் பொதுத் தேர்தலின் போது சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்திற்கு தன்னை மீண்டும் தெரிவு செய்து அதன் மூலம் அமைச்சு பதவியை பொறுப்பேற்க ஒத்துழைத்த கம்பஹா மாவட்டம் மற்றும் பியகம தேர்தல் தொகுதியினர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வ தற்காக அமைச்சுக்கு வருகை தந்த பாது காப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ. பி. ஜி. கிஸ்திரி, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன. விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்ஹல ஆகியோர் வரவேற்றனர்.
மங்கள விளக்கேற்றி மகா சங்கத்தினர் மற்றும் சமய தலைவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் சுபவேளையில் முதல் ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கலந்து கொண்டோர் மற்றும் அமைச்சு அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply