அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச தயார் : மனோ கணேசன்

manoபொது நிலைப்பாடுகளை உருவாக்கும் நோக்கில் கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால், அந்த அழைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கலந்து பேச தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால், அந்த அழைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

 

முழு பாராளுமன்றத்தையும், அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் கொள்கையை முன்னெடுக்க இன்று அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. இந்த புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுக்க வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்வாங்கப்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

 

இந்நிலையில் “உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம்” என்ற எமது நீண்டகால கொள்கையின் அடிப்படையில் நாம் ஒருவருக்கொருவர் துணை இருப்பதை நாம் எப்போதும் வலியுறுத்திதான் வந்துள்ளோம்.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே மத்திய, மேல், ஊவா, சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தொகுத்து ஒரு வரைபை உருவாக்கும் பணியின் நிமித்தம் ஒரு நிபுணர் குழுவை தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போது நியமித்துள்ளது.

 

இவ்வார இறுதியில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவை தொடர்பான பிரேரணை சமர்பிக்கப்பட்டதன் பின்னர், இந்த நிபுணத்துவ குழுவில் உள்ளடங்கியுள்ள நிபுணர்களின் பெயர் விபரப்பட்டியல் அறிவிக்கப்படும். இந்நிலையில் பொது நிலைப்பாடுகள் தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்குமானால் நாம் நிச்சயமாக கலந்துபேச தயாராக உள்ளோம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply