கொழும்பில் சத்தியாக்கிரகம் தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்புக்கு

manoதோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு 14 நாட்கள்அவகாசம் வழங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. பெருந்தோட்டத்துறை இக்காலப் பகுதிக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் மலையகம் தழுவிய பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களான அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

 

தனியார் துறைக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், கூட்டு ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் ஒருநாள் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

 

முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் நடந்த இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களும், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

அரசாங்கத்தின் அறிவிப்பினை ஏற்று சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாவிட்டால் சகல கம்பனிகளும் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்துவிட்டுச் சென்றால் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசித் தீர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், தேயிலையின் விலை குறைந்திருப்பதால் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

 

கொழும்பில் நடைபெற்ற இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தலைவர்கள் பங்குபற்றிய ஆரம்ப போராட்டம், கோரிக்கை நிறைவேறாவிட்டால் மக்களின் பங்குபற்றலுடன் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தார்கள்.

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக ஆயிரம் ரூபா கோரினார். பின்னர் அந்தக் கோரிக்கை கைவிடப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் கூறினார். அவருடைய ஆயிரம் ரூபா கோரிக்கைக்கு நாம் அப்போது ஆதரவு வழங்கியிருந்தோம்.

 

எனினும் தற்பொழுது தேயிலை விலை குறைந்திருப்பதால் சம்பள உயர்வு கோர முடியாது என்று அவர் கூறுகிறார். மக்களை மேலும் ஏமாற்றாமல் 2500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவாக வழங்க வேண்டும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இதனை கம்பனிகள் வழங்கவேண்டும்.

 

தனியார் துறைக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் கம்பனிக் காரர்கள் இதற்கு இடமளிக்கிறார்களில்லை. இலாபம் இல்லையென்று கூறுகின்றனர். கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாயின் அவற்றை அரசாங்கத்திடம் கையளித்துச் செல்லலாம். அதனை அரசினால் சரியாக நிர்வகிக்க முடியும். போராடித்தான் சம்பள உயர்வைப் பெற வேண்டியிருக்கிறது. 14 நாட்களுக்குள் இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை வழங்காவிட்டால் மலையகம் தழுவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்குச் செல்வதைவிட வேறு வழி இல்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

நஷ்டத்தை ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும்

 

பெருந்தோட்டக் கம்பனிகள் இதுவரை இலாபத்தை பகிர்ந்துகொள்ளாத நிலையில் ஏன் தொழிலாளர்கள் நஷ்டத்தை மாத்திரம் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கேள்வியெழுப்பினார்.

 

எமது அரசாங்கம் தனியார் துறைக்குப் பெற்றுக்கொடுத்த 2500 ரூபாவை பெருந்தோட்டத் துறைக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் அனுமதியும் வழங்கியுள்ளது.

 

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களில் கலந்துகொள்ளும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றக் கூடாது. தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இது ஆரம்பகட்டப் போராட்டம். எதிர்காலத்தில் நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டத்துக்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்றார்.

 

மக்கள் குரலாகவே நிற்போம்

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் கம்பனிகளால் நியாயமான சம்பளத்தை வழங்க முடியாது. இது விடயம் தொடர்பில் நாம் அரசாங்கத்துடன் பேசி இணக்கம் காணப்பட்டபோதும் கம்பனிகள் இதனை வழங்குவதில்லை.

 

மக்களின் துயரைத் துடைப்பதற்கு மக்கள் பக்கமே நிற்கின்றோம். எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்தில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்போம் என இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கூறினார்.

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை சட்டத்துக்கு முரணானது அல்ல.

 

சட்டத்துக்கு அமையவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தொழிற்சங்கவாதியும் அஸீஸ் ஜனநாயக காங்கிரஸ் தலைவருமான அஷ்ரப் அசீஸ் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply