இயற்கை அனர்த்தம் ஏற்படப்போவதாக மக்கள் மத்தியில் வீண் வதந்தி
கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து
வெளியேற்றப்பட்ட 7,763 குடும்பங்களில் 196 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர்
மாத்திரமே முகாம்களில் இன்னமும் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர
பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
வெடிவிபத்து ஏற்பட்ட முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களைத்
தவிர ஏனையவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதுடன், நேற்று இரவுடன்
எச்சரிக்கை மிகுந்த பகுதி மேலும் குறைக்கப்படும் என்றும் கூறினார். அனர்த்த
முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவற்றைக்
கூறினார்.
இந்த விபத்தில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட
வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், அவற்றை மீளக்கட்டிக்கொடுப்பதற்கும் அரசாங்கம்
நடவடிக்கை எடுக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர், வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில்
உள்ளவர்களுக்குத் தேவையான உணவினை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம்
முன்னெடுத்திருப்பதாகக் கூறினார்.
வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு சபையைக் கூட்டி
ஆராய்ந்திருப்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று
வீடுகளைவிட்டு வெ ளியேறிய மக்களுடனும் அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்
நடத்தியிருந்ததுடன், வெளியேறிய மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்குமாறு பணிப்புரை
வழங்கியிருப்பதாக அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இவ்விபத்தில் ஒரு உயிரிழப்பு மாத்திரமே ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இயற்கை
அனர்த்தம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை தோன்றியுள்ளதாக பல வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இவ்வாறான வதந்திகளுக்கு ஊடகங்கள் இடமளிக்கக் கூடாது என்றும் அமைச்சர்
கேட்டுக்கொண்டார். விபத்துச் சம்பவம் தொடர்பில் எந்தத் தகவல்களையும் அரசாங்கம்
மறைக்கவில்லை.
இராணுவ முகாமில் ஆயுதக்களஞ்சியத்தில் இவ்வாறான பாரிய தீ விபத்து ஏற்பட்டது
இலங்கைக்கோ அல்லது உலகத்துக்கோ இதுவே முதற்தடவையல்ல. இவ்வாறான அனர்த்தங்களை
எதிர்கொண்ட அனுபவம் கடந்தகாலத்தில் இருப்பதால் இதிலிருந்து மீள்வதற்கான சகல
ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply