சபாநாயகர் அங்கீகாரம்; எதிர்க்கட்சி அதிருப்தி

parlimentகுழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றும்) சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கையால் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

 

குறித்த சட்டமூலத்தை அங்கீகரித்து கையெழுத்திட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபை நடவடிக்கைகள் ஆரம்பித்தபோது கூறினார். இந்த நிலையில் தினப்பணிகள் ஆரம்பிக்க முன்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, குறித்த சட்டமூலத்துக்கு தாம் முன்வைத்த முக்கியமான திருத்தம் உள்வாங்கப்படவில்லை என்று கூறியதுடன், அந்தத் திருத்தத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

இது தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மஹிந்த ஆதரவு அணியினர் தமக்கு நேரம் ஒதுக்கப்படாமை தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதால் வாக்குவாதம் முற்றியது. எனினும், ஜே.வி.பியினர் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது என்பதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்தார்.

 

அரசாங்கத்தின் சார்பில் கருத்துக் கூறிய சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னர் தீர்மானமொன்றுக்கு வருவதாக உறுதியளித்தார்.

 

அநுரகுமார திசாநாயக்க

 

காணாமல்போனோர் அலுவலகம் பற்றிய சமர்ப்பிக்கப்பட்ட போது பாராளுமன்றத்தினுள் சுமுகமான சூழல் காணப்படவில்லை. அந்த சட்டமூலத்திற்கு நாம் மூன்று முக்கிய திருத்தங்களை முன்வைத்திருந்தோம் அரசாங்கத்திற்கு. நீங்களும் அந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டீர்கள். அந்த திருந்தங்களை குழுநிலையில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. அன்றையதின ஹன்சார்ட்டை எடுத்துப் பார்த்தால், அன்றைய குழப்பமான சூழல் காரணமாக திருத்தங்களை சரியாக முன்வைக்க முடிந்திருக்கவில்லை. அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. திருத்தங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தது எமக்கு கேட்டிருக்கவில்லை.

 

இந்த திருத்தங்களுடன் தான் நாம் இந்த சட்டமூலத்திற்கு நாம் ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தோம். அந்த திருத்தங்களை மீண்டும் கொண்டு வர முடியுமா?

 

அதேபோல், சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் இதில் உள்வாங்கப்படவில்லை. நாம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் முன்னர் ஏற்றுக்கொண்டதாலேயே இச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க இணங்கினோம். எனினும் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் எமது திருத்தங்களில் ஒன்று இடம்பெறவில்லை இதற்கு அரசு எவ்வாறான தீர்வை முன்வைக்கப்போகிறது என்று கேட்டார்.

 

தினேஷ் குணவர்த்தன எம்பி

 

அதன் பின்னர் தினேஷ் குணவர்த்தன எம்பி கூறுகையில், அன்றை தினம் உரிய முறையில் சபை நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கவில்லை என்பது ஹன்சார்ட் அறிக்கை மூலம் தெளிவாகிறது. அவ்வாறான நிலைமையில் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றக் கொள்வதற்கான சூழல் இருந்திருக்கவில்லை.

 

27 ஆவது சரத்தில் சர்வதேச சாசனம் என்ற சொற்களை உட்படுத்தி சர்வதேச சாசனம் என்பது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சரினால் கைச்சாத்திடப்பட்டு ஒப்புவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை சர்வதேச சாசனமொன்று பிரதியீடு செய்ய முடியாது.

 

31 திருத்தங்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இது தொடர்பில் சபாநாயகரின் கருத்தை கேட்கிறோம் என்றார்.

 

விமல் வீரவன்ச எம்பி

 

அன்று வாக்கெடுப்பு கேட்டேன். அது உங்களுக்கு கேட்காமல் இருந்திருக்கலாம். அன்று தான்தோன்றித்தனமாக நிறைவேற்றப்பட்டமையால் தான் அரசாங்கம் கொண்டு வந்த திருத்தமும் அதேபோல் ஏனைய திருத்தங்களும் உள்வாங்கப்பட முடியாமல் போனது. அன்று திருத்தத்தை முன்வைத்து ஆதரவளிக்க முன்வந்தவர்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வந்து அந்த திருத்தங்களை உள்வாங்கும் தார்மீக பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

 

அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல

 

இவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கிரியல்ல கூறுகையில், இந்த விவாதத்தில் கலந்துக் கொள்வதில் மிகவும் அக்கறையாக இருந்தோம். உண்மையில் இதை நிறுத்தியது நாமல்ல, இவர்கள் தான். இவர்கள் ஆசனத்தில் சென்று இருந்திருந்தால் விவாத்ததை நடத்தியிருக்கலாம்.

 

சபாநாயகர் கையொப்பமிட்டுவிட்டார். இந்த நடவடிக்கையை திரும்ப பின்கொண்டு செல்ல முடியாது. இந்த திருத்தங்களை வாசித்திருந்தால் அனைத்தும் உள்வாங்கப்பட்டிருக்கும். அந்த குழப்பத்துக்கு மத்தியிலும் நான் வாசித்தேன். ஜே.வி.பி சார்பில் வாசிக்கப்பட்டதா தெரியாது. எனினும் அது பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

 

அன்று நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி நாம் மிக விரைவில் பதிலொன்றை தருகிறோம் என்றும் தெரிவித்தார்.

 

பிமல் ரத்நாயக்க எம்பி

 

இந்த சட்டமூலத்தில் இந்த அலுவலகம் செயற்படும் முறை தொடர்பில் நீதி அமைச்சருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில ஒழுங்குவிதிகளை ஏற்படுத்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஆகவே, இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட 3 மாதத்துக்கும் அதிகமான காலம் எடுக்கும். ஆகவே, வரவு-செலவுத்திட்டத்திற்கு முன்னதாக இந்த சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கத்துக்கு போதுமான கால அவகாசம் இருக்கிறது. ஆகவே, செயற்படுவதற்கு இது தடையல்ல எனச் சுட்டிக் காட்டினார்.

 

இதன்போது கருத்துக் கூறிய சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 

சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி வரவு-செலவுத்த்திட்டத்திற்கு முன்னதாக இதை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறியதைத் தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply