ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்; 60 பேர் சாவு

emanஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதியின் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த ஹவுதி போராளிகள் தலைநகர் சனாவை கைப்பற்றினர். இதனால் நாட்டை விட்டு வெளியேறிய அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு படைகள் களமிறங்கின.

 

இந்த படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹவுதி படைகளுக்கு எதிராக போர் தொடுத்து வருகின்றன. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 6 ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள் ஆவர். மேலும் சுமார் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

அரபு படைகளின் ஆதரவால் தனது அரசை தொடர்ந்து வரும் அதிபர் மன்சூர் ஹாதி, அங்குள்ள 2–வது பெரிய நகரமான ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அரபு படைகளின் ஆதரவுடன் ஹவுதி போராளிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அவரது படைகள், நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகின்றன.

 

 

 

தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். தலைநகர் சனாவில் இருந்து ஹவுதி படைகள் வெளியேறவும், இரு தரப்பினரும் இணைந்த ஒன்றுபட்ட அரசு அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. அமெரிக்கா வெளியிட்ட இந்த திட்டத்தின்படி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இதற்கிடையே உள்நாட்டு போரால் நிலவி வந்த குழப்பத்தை பயன்படுத்தி ஏமனில் பயங்கரவாதிகள் காலூன்ற தொடங்கினர். குறிப்பாக நாட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்திய அல்–கொய்தா மற்றும் ஐ.எஸ். அமைப்பினர், அரசு படைகள் மீட்டெடுத்த நகரங்களிலும் தங்கள் தளங்களை அமைத்து வருகின்றனர். இதனால் ஏடன் மற்றும் பல பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

 

 

 

ஏடனின் வடக்கு பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. நேற்று காலையில் இந்த முகாமுக்கு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் திடீரென காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

 

இதில் ராணுவ பயிற்சி முகாம் முற்றிலும் குலுங்கி சின்னாபின்னமானது. அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தூக்கி வீசப்பட்டும், உடல் சிதறியும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து அலறினர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள 3 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

 

 

இந்த தாக்குதலில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

 

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலால் ஏடன் நகர் முழுவதும் நேற்று பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply