காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள்,அனைத்து எதிர்க்கட்சியினர் ரயில் மறியல்
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.இதற்கிடையே காவிரி நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மத்திய அரசு முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்தது.
பிறகு மத்திய அரசு இந்த விவகாரத்தில் திடீர் பல்டி அடித்துவிட்டது. பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று கூறியது.
மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18-ந்தேதிகளில் 2 நாட்கள் 48 மணி நேர ரெயில் மறியல் போராட்டம் நடத்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்தது. இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சீமானின் நாம் தமிழர் ஆகிய 10 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் வெள்ளையன், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களும் ரெயில் மறிய லுக்கு ஆதரவு தெரிவித்தன.
தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் ரெயில்களை மறித்து போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெயில் நிலையங்களில் இன்று அதிகாலை முதலே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
திட்டமிட்டப்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக காவிரி பாசனப் பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம் மிகத் தீவிரமாக காணப்பட்டது. விவசாயிகள் அலை அலையாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து பல்லாயிரக்கணக்கானவர்களை தமிழகம் முழுவதும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கைதானார். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் காலை 8.50 மணிக்கு பெரம்பூர் மேம்பாலம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து 9 மணிக்கு அவர் தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைகளில் தி.மு.க. கொடி ஏந்தி பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.
9.10 மணிக்கு ஸ்டாலினும் தி.மு.க. நிர்வாகிகளும் ரெயில் மறியலில் ஈடுபட உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை ரெயில் நிலையம் முன்பு அரண்போல நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதையடுத்து ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அனைவரும் ரெயில் நிலையம் முன்பு திரண்டு நின்றனர். மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் கோஷம் எழுப்ப, தி.மு.க. தொண்டர்கள் அந்த கோஷத்தை திருப்பி எழுப்பி னார்கள்.
போராட்டம், போராட் டம்- விவசாய மக்களை மீட்டெடுக்கப் போராட்டம், கண்டிக்கிறோம், கண்டிக் கிறோம்- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம், பறிக்காதே, பறிக்காதே- காவிரி நீர் உரிமையை பறிக்காதே, தமிழா, தமிழா – ஒன்றுபடு தமிழா, விட மாட்டோம், விட மாட்டோம் – மோடி அரசை விட மாட்டோம், கூட்டு, கூட்டு சட்டசபையை கூட்டு, கருகுதே, கருகுதே – பயிரெல்லாம் கருகுதே, அடிக்காதே, அடிக்காதே – விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
சுமார் 30 நிமிடங்கள் கோஷமிட்ட நிலையில் அவர்களை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச் சந்திரன், மாவட்ட செயலாளர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தி.மு.க. நிர்வாகிகள் கிரி ராஜன், தேவஜவகர், ஜெயின், தமிழ்வேந்தன், நாகராஜ், சாமிக்கண்ணு, ஜோசப் சாமுவேல், ராஜகோபால், அம்பத்தூர் ஆஸ்டின், முரளி, ஜி.எம்.தேவன், துளசிங்கம், விஜயகுமார், வேலு உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போலீசார் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த மாநகர பஸ்களில் ஏற்றினார்கள். முதலில் தி.மு.க. தொண்டர்கள் செல்லட்டும் என்று மு.க.ஸ்டாலினும், நிர்வாகிகளும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் கவனம் தி.மு.க.வினரை பஸ்களில் ஏற்றுவதில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின், ரெங்கநாதன்,. சேகர்பாபு உள்பட சுமார் 100 பேர் போலீசாரின் அரணை உடைத்துக் கொண்டு பெரம்பூர் ரெயில் நிலையத்துக்குள் சென்றனர். அங்கு அவர்கள் தண்டவாளத்தில் நின்று போராட்டம் செய்தனர்.
கையில் தி.மு.க. கொடி ஏந்தி வந்த மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டார். அப்போது அந்த வழியாக சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில் வந்தது.
அந்த மின்சார ரெயிலை மு.க.ஸ்டாலினும் தி.மு.க.வினரும் மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த ரெயில் சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே நின்றது.
இதையடுத்து மு.க.ஸ்டாலினையும், தி.மு.க. நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.
சைதாப்பேட்டையில் ரெயில் மறியலுக்கு சென்ற முன்னாள் மேயர் மா.சுசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
சென்னை பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். காலை 9.45 மணிக்கு அவர் பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்கு வந்தார். வேளச்சேரியில் இருந்து அவர் இரு சக்கர வாகனத்தில் பேசின்பிரிட்ஜ் வந்து சேர்ந்தார்.
பிறகு அவர் தொண்டர்களுடன் பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்குள் சென்றார். ஆமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து திருமாவளவனும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் வழி மறித்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சுமார் 30 நிமிடம் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது. பிறகு திருமாவளவன், பாவரசு, உங்கை அரசன், மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், அம்பேத் வளவன் உள்பட சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரத்தில் காஞ்சி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் திரண்டு தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் மற்றும் நிர்வாகிகள் விஸ்வநாதன், தமிழ்மணி, தண்டபாணி, படப்பை மனோகரன், ஜெயக்குமார், பம்மல் வே.கருணாநிதி, பல்லாவரம் ஜோசப், மேடவாக்கம் ரவி, செங்கல்பட்டு நரேந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அவுரா செல்லும் கொரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று காலை கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. தி.மு.க. சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவன் எஸ். சுதர்சனன் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் வடசென்னை காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் இரா. மனோகர், திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி, ஆர்.டி.சேகர், தி.மு.க. பகுதி செயலாளர்கள் என். எம்.கணேஷ், ஏ.டி.மணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் டி.வி.துரைராஜ், எம்.எஸ்.திரவியம், பகுதி செயலாளர்கள் ஜிம்பாபு, ரூப் சந்தர், செய்தி தொடர்பாளர் வெங்கடேசன் உள்பட 2000 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர்கள் ஆனந்த குமார், ஸ்டீபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 2000 பேரை கைது செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply