மோசூல் நகரை மீட்க உச்சகட்ட தாக்குதல்: 15 லட்சம் மக்களின் கதி என்ன? – ஐ.நா.சபை கவலை

iraqஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.ஈராக்கில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் இங்கிருந்தவாறு உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள இந்நகரை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை மோசூல் நகரைவிட்டு வெளியேற விடாமல் மிரட்டி, தடுத்து வைத்துள்ளனர். அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து பலரை கொன்றும் குவித்துள்ளனர்.

மோசூலை கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் ராணுவம் எடுத்துவந்த பல்வேறுகட்ட நடவடிக்கைகள் பெரியளவிலான பலன் தரவில்லை. மோசூல் நகருக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் பசி,பட்டினியாலும், கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மோசூல் நகரை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்தி, அந்நகரை உடனடியாக மீட்குமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி இன்று அதிகாலை உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அந்நாட்டு தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் செய்திகளில் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி ராணுவ சீருடையில் தோன்றி முக்கிய தளபதிகள் இடையே வீராவேசமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

‘ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து உங்களை (மோசூல் மக்கள்) விடுவிப்பதையும், உங்களது கண்ணியம் நிலைநாட்டப்படுவதையும் குறிக்கோளாக கொண்டு நமது படைகள் இன்று மோசூலுக்குள் நுழைகின்றன.

இறைவனின் நாட்டப்படி, நாம் வெற்றி பெறுவோம்!’ என்று ஹைதர் அல் அபாடி கூறும் காட்சியும், அதனைதொடர்ந்து ஈராக் நாட்டின் தேசியகீதம் இசைக்கப்படும் பின்னணியில் ராணுவப் படைகள் மோசூல் நகருக்குள் நுழைந்து முன்னேறிச் செல்லும் காட்சிகளும் தொலைக்காட்சி செய்திகளில் மீண்டும், மீண்டும் காட்டப்படுகின்றன.

ஈராக்கின் இந்த துணிச்சலான நடவடிக்கையை வரவேற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர், ‘ஈராக் அரசின் இந்த முடிவு ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் இறுதிக்கட்டமாக அமையும். இந்த தாக்குதலில் ஈடுபட்டுவரும் ஈராக் படைகளுடன் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசப் படைகளும் உறுதுணையாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையிலான இந்த உச்சகட்ட மோதலில் மோசூல் நகரில் வசித்துவரும் சுமார் 15 லட்சம் மக்களின் கதியை எண்ணி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மற்றும் நிவாரணம் தொடர்பான உயர் அமைப்பு கவலையும், வேதனையும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்த அமைப்பின் செயலாளரான ஸ்டீபன் ஓ’ப்ரியென் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் விளைவாக, குழந்தைகளும், முதியவர்களும் அதிகமாக பாதிக்கப்படும் அபாயமும், அங்கிருந்து சுமார் பத்து லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறும் மிகமோசமான சூழலும் உருவாகியுள்ளது.

பல்லாயிரக்காணக்கான சிறுவர் சிறுமியரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் மனிதகேடயங்களாக பயன்படுத்தப்படக்கூடும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போர்முனைகளில் சிக்கி உயிரிழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply