புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவது எப்போது? புதிய தகவல்கள்

500பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் பணப்பரிமாற்றம் நேற்றும் முடங்கியது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வழங்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர், பொதுமக்கள் அன்றாட தேவைக்கு கூட பொருட்கள் வாங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பணப்பிரச்சினை தீராததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். பால், மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட செலவுக்கும், மருத்துவ செலவுக்கும் பணம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,000 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.2,000 வரை எடுக்கலாம் என்ற விதியும் தளர்த்தப்பட்டு ரூ.2,500 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் பல முறை வருவதை தடுக்க விரலில் ‘மை’ வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பழைய பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு விதிமுறைகளை அடிக்கடி மாற்றி நெருக்கடி கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறைந்தது.

10 நாட்கள் தொடர் பணிகளுக்குப் பின்னர் நேற்று முன்தினம் ஒரு நாள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்குப்பின்னர் வங்கிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டது

இதையடுத்து அதிகாலை முதலே பணம் எடுப்பதற்கும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும் வங்கிகளின் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்.

ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு குறைவான ரூபாய் நோட்டுகள் அனுப்பப்படுகிறது. புதிய ரூ.2,000 நோட்டுகள் மட்டும் குறைந்த அளவில் வங்கிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. தேவைக்கு ஏற்ப போதிய அளவு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததால் பணம் மாற்ற வருபவர்களுக்கு கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறுகிறார்கள்.

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடியவில்லை. வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றாலும், அந்த தொகையை கொடுக்க பணம் இல்லாமல் வங்கிகள் திண்டாடுகின்றன.

பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் நேற்றும் பணப்பரிமாற்றம் அடியோடு முடங்கியது. பெரும்பாலான வங்கிகளில் கையிருப்பு பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாமல் திணறின.

ஒரு சில வங்கிகளில் மிக குறைந்த அளவில் பணம் இருப்பு இருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கினார்கள். பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து கொடுக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு வினியோகிக்கப்படும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நேற்றும் நீடித்தது.

நீண்ட வரிசையில் கால் கடுக்க பல மணி நேரம் காத்து நின்றும், பணம் இல்லாததால் பொதுமக்களை பெரும்பாலான வங்கிகள் திருப்பி அனுப்பின. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வங்கி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது. பணம் தீர்ந்து போனதால் சில வங்கிகளின் முகப்பில் ‘பணம் இல்லை’ என்று போர்டுகளும் வைக்கப்பட்டன.

வாடிக்கையாளர்கள் தங்கள் கைவசம் உள்ள பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டும் வங்கிகள் அனுமதித்தன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையை கருதி அதிகளவு பணம் எடுக்க வந்தவர்களுக்கும் பணம் வழங்காததால் கவலையுடன் திரும்பிச் சென்றனர். சிறு, குறு வியாபாரிகள், குடிசைத்தொழில் செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை பணத்தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்கள் பணம் இல்லாததால் முடங்கி கிடக்கின்றன. திறந்திருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களின் முன்பும் நீண்ட வரிசை காணப் பட்டது. சிலர் 2, 3 கார்டுகளை வைத்து பணம் எடுத்துச் சென்றதால், விரைவிலேயே பணம் தீர்ந்து போனது.

இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு சிலர் ஏ.டி.எம். மையங்களின் வெளியே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பியதும், முதலாவது ஆளாக எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று அதிக நேரம் காத்துக்கிடந்ததையும் காணமுடிந்தது.

பணத்தட்டுப்பாடு காரணமாக தபால் நிலையங்களிலும் பணப்பரிமாற்றம் பணி பாதிக்கப்பட்டது. இருப்பு உள்ள தொகையை வைத்து ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்க முடிந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ரிசர்வ் வங்கியிலும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் வந்திருந்தனர். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பணப்பரிமாற்றம் செய்ய கொடுத்தவர்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுக்கப்பட்டன.

சென்னை பார்க்டவுன் இந்தியன் வங்கி கிளையில், உயர் அதிகாரிகளான துணை பொது மேலாளர் எம்.வி. ரமணா, உதவி பொதுமேலாளர் ராமு ஆகியோர் வரிசையில் நின்ற பொதுமக்களிடம் எந்தெந்த வகையில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம், பணத்தை டெபாசிட் செய்வதற்கான வழிமுறைகள் என்ன?, பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பதற்கு ஆலோசனை வழங்கினார்கள். இதனை வரிசையில் நின்ற பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

நாசிக் மற்றும் மைசூருவில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அந்த பணம் விரைவில் பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களும், வங்கியில் பணம் எடுக்க வருபவர்களும் புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். தற்போது சென்னை வந்துள்ள நோட்டுகளை வினியோகம் செய்ய உத்தரவு வரவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகளை தங்கள் ஊழியர்களுக்கு வழங்க அரசு நிறுவனங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. எனவே கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு வந்த பிறகே வங்கிகளில் பட்டுவாடா செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் பிறகே ஏ.டி.எம். எந்திரங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படும். 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பின்னர் பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறையும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்துக்கு பால் ஊற்றி, மாலை அணிவித்து இறுதிச்சடங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply