அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள், காப்புறுதி கொடுப்பனவு : அநுர பிரியதர்ஷன யாப்பா
அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் காப்புறுதி இழப்பீடு மற்றும் அரசாங்கத்தின் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ நிலை யம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு தொடர்பாக ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: அனர்த்த முகாமைத்துவ நிலையம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சகலவற்றுக்கும் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் அது தொடர்பான சட்டமும் 2005ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. நீரை அடிப்படையாகக் கொண்டே அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக வௌ்ளப்பெருக்கு மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு நாடு அடிக்கடி முகங்கொடுக்கிறது. இலக்கங்களைக் கொண்ட அளவுமுறையின் அடிப்படையில் வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலையை அளவிடுகிறது. இதற்காக சர்வதேச தகவல்களில் மாத்திரம் நாம் நம்பியிருக்க முடியாது. மே மாதம் (24) முதல் (29) வரையான காலப்பகுதிக்கான காலநிலை பற்றிய எச்சரிக்கையை விடுத்திருந்தோம்.
அனர்த்த நிலைமையில் முப்படையினர் முக்கிய பங்காற்றியிருந்தனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் முப்படையினருக்கு கடந்த வருடம் 100 மில்லியன் ரூபாவை செலவுசெய்திருந்தது. இவர்கள் மாத்திரமன்றி பொதுநிர்வாக அமைச்சின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
காலநிலை குறித்த எச்சரிக்கை கிடைத்தவுடன் அதிகாரிகள் ஒலி பெருக்கிகள் மூலம் அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்கள். இதனாலேயே உயிரழப்புக்களை பெருமளவு குறைக்க முடிந்தது.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படுத்தப்பட்டது. இவர்கள் அரசாங்கத்தின் பொறிமுறையின் கீழ் இல்லாதவர்கள் எனக் கூறினால் அது தவறாகும். அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தமையால் முப்படையினரின் உதவிகள் பெறப்பட்டன. 8500 இராணுவத்தினர் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உணவுப் பார்சல்களை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
கடற்படையினர் 120 படகுகளை பயன்படுத்தி மக்களை மீட்டதுடன், நிவாரணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தனர். இவர்களும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உணவுப் பொதிகளை வழங்கியிருந்தார்கள். விமானப் படையினர் 211 மணித்தியால பறப்பு நேரங்களில் ஈடுபட்டதுடன், ஒரு மணித்தியாலத்துக்கான செலவு 1500 அமெரிக்க டொலர்களாகும். எனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களையோ உதவிகளையோ செய்யவில்லையென்ற குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.
பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு அரசு நிதி வழங்கியுள்ளது. உணவுக்காக 266 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவுசெய்துள்ளது. உலருணவு வழங்கவும் நிதியை அரசு வழங்கவுள்ளது. வீடுகளை இழந்தவர்கள் வாடகைக்கு வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்க காணிகளில் வீடுகளை அமைத்து அதில் குடியமர்த்த எதிர்பார்த்துள்ளோம். இதற்காக மூன்று திட்டங்களை தயாரித்துள்ளோம். 1.2 மில்லியன் ரூபாவில் வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளோம். இத்திட்டத்தின் கீழேயே அரநாயக்க மண்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டை அமைத்துக் கொடுத்திருந்தோம்.
இத்தொகையில் அவர்களே தமது வீடுகளை அமைக்கும் திட்டமொன்றும் உள்ளது. அது மாத்திரமன்றி நாட்டிலுள்ள சகல பிரஜைகள் மற்றும் வீடுகளை அரசாங்கம் மீள் காப்புறுதி செய்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் சகல பிரஜைகளையும் மீள் காப்புறுதி செய்த நாடாக இலங்கை திகழ்கிறது. இதற்காக 300 மில்லியன் ரூபா காப்புறுதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு காப்புறுதி கொடுப்பனவுக்கு மேலதிகமாகவே வீடுகள் அமைக்க 1.2 மில்லியன் ரூபா வழங்கப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply