ஏவுகணை சோதனை மூலம் தென்கொரியா பதிலடி

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளுக்கு இடையிலும் வடகொரியா தொடர்ந்து அணுகுண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தும் வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த நாடு அதிரடியாக ஒரு ராக்கெட் என்ஜினை சோதித்துப்பார்த்துள்ளது.

இது, அணுகுண்டை சுமந்து கொண்டு, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி, குறிப்பாக அமெரிக்காவை குறிவைத்து தாக்குவதற்கான நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இது அண்டை நாடான தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிற நிலையில் நடைபெற்றுள்ள இந்த ராக்கெட் என்ஜின் சோதனை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

கடந்த 21-ந் தேதி, “பிராந்தியத்தில் மேலும் பதற்றம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று விரும்பினால், வடகொரியா மீது ராஜ்யரீதியிலான நிர்ப்பந்தங்களை அதிகரியுங்கள்” என்று சீனாவுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கிடுக்கிப்பிடி போட்ட நிலையில் இந்த ராக்கெட் என்ஜின் சோதனை நடந்திருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் போன்று ஆகி உள்ளது.

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவின் முக்கிய பகுதியை வந்து தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணை ஒன்றை கட்டமைப்பதற்கான முயற்சிதான், வட கொரியாவின் ராக்கெட் என்ஜின் சோதனை” என்று குறிப்பிட்டனர்.

மேலும் இந்த சோதனை குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி தரும்வகையில் தென்கொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்தது.

இந்த ஏவுகணை ஹயுன்மூ ரகத்தை சேர்ந்ததாகும்.

ஆன்ஹயிங் சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், உரிய இலக்கை சென்று அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் செய்தி தொடர்பாளர் பார்க் சூ ஹியுன் உறுதி செய்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் பேசும்போது, “முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கில் ஏவுகணை மிகத்துல்லியமாக விழுந்தது” என்று குறிப்பிட்டார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், “ஏவுகணையின் ஏவுதளத்துக்கு நான் வந்தது அர்த்தமுள்ள பயணமாக அமைந்தது. நாட்டு மக்கள் மட்டுமின்றி நானும், வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நமது நாட்டின் ஏவுகணை ஏவும் திறனை உறுதி செய்ய முடிந்தது” என்று பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “வடகொரியாவை விட நாம் ஒன்றும் பின்தங்கி விடவில்லை என்பதை இப்போது மக்கள் உணர்ந்துகொள்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply