எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்க தயார்
இலங்கை இராணுவத்தினர் எந்தவொரு போர் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்றாலும் எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளதாக புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். இராணுவத்தை பொறுத்த மட்டில் நாட்டின் பொது தண்டனைக் கோவை சட்டம் மற்றும் இராணுவச் சட்டம் ஆகிய இரண்டு சட்டவிதிமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் எனவே,இராணுவத்தினர் தவறுகள் செய்வதற்கு மிகவும் குறைவான சந்தர்ப்பங்களே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் 22வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நேற்று(05) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.அங்கு அவர் தெரிவித்ததாவது:
இராணுவத்தின் பலம் ஒழுக்கமாகும்” ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இல்லாவிடின் இராணுவம் என்ற பேச்சுக்கு இடமில்லை. இராணுவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அந்த குற்றங்களை நேரடியாக கண்டவர்களா? களத்தில் இருந்தவர்களா? அல்லது யாராவது சொன்னதை வைத்து கூறுகின்றார்களா என்ற விடயத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது.
எனவே அது தொடர்பில் சாரியாக ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றார். என்னை பொறுத்தமட்டில் இராணுவ அதிகாரிகளோ ஏனைய வீரர்களோ களமுனையில் குற்றச் செயல்களில் ஈடுப்பட வில்லை. எனினும் எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்உள்ள. அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளும் நடைபெறுகின்றன. அந்த விசாரணைக்கு நாம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ள அதேசமயம் அவை தொடர்பில் உண்மைத் தன்மையை விளக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை யுத்த குற்றச்சாட்டு என்ற வார்த்தையை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்த அவர், 2 இலட்சம் பேரைக் கொண்ட இராணுவத்திற்குள் ஒரு சிலர் சில சம்பவங்களில் ஈடுபடலாம். இதனை முற்றாக தவிர்க்க முடியாது. அதனை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த இராணுவமும் தவறிழைத்தவர்கள் எனக் கூற முடியாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply