மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ரகசிய கூட்டணி வைத்துள்ளார்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா அணி) சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பசும்பொன் நகர் தொண்டி வாப்பா தோப்பில் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
தர்ம யுத்தம் காஞ்சிபுரத்தில் தொடங்கி 8 மாவட்டங்களில் நடந்து முடிந்து ஒன்பதாவது கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இன்று தொண்டர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். ஜெயலலிதாவின் விசுவாச மிக்க தொண்டர்கள் கூட்டத்தை கண்டு நம்மை எதிர்க்கும் கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
தேசியத்தையும், தெய் வீகத்தையும் இருகண் என போற்றிய முத்துராமலிங்க தேவரும், மாணவர்களையும், இளைஞர்களையும் வழி நடத்திய அப்துல்கலாம் பிறந்த வீரத்தின் விளைநிலமான ராமநாதபுரத்தில் இந்த புனித தர்மயுத்தத்தின் மாபெரும் வெற்றிக்கூட்டம் நடைபெறுவது உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கும்.
ஒரு சிலர் அம்மாவின் பெயரை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். ராமாயண போரில் ராமன் எதிரிகளை வீழ்த்தியது போல தர்மயுத்தத்தில் நாமும் எதிரிகளை வீழ்த்துவோம். தீயவர்களின் சூழ்ச்சியால் அயோத்தியில் ராமனின் ஆட்சி எவ்வாறு தடைபட்டதோ அதே போன்று தற்போது ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சிறுதடங்கல் வந்துள்ளது. மீண்டும் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச்செய்வோம்.
தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். இரு அணிகளை இணைப்பதற்கான பேச்சு வார்த்தை குழுவை கலைத்த பின்பும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று அங்கிருப்பவர்கள் தினமும் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி பல தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார். அவர் பொய் சொல்வதில் அவர் தந்தை கருணாநிதி மாதிரி. இப்போது சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினர் மு.க. ஸ்டாலினுடன் புதிய கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
சட்டமன்றத்தில் ஸ்டாலினை பார்த்து சிரித்தேன் என்பதை சசிகலா என்மீது பெருங்குற்றமாக கூறினார். ஆனால் இப்போது தி.மு.க. வுடன் ரகசிய கூட்டணி அமைத்து ஆளும் கட்சி செயல்படுகிறது.
மு.க.ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார், தான் எப்படியாவது முதல்- அமைச்சர் ஆகிவிடலாம் என்று. ஆனால் அவரின் கனவு ஒரு போதும் பலிக்காது. மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியையும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வையும் மக்கள் விரட்டி அடிக்கும் காலம் விரைவில் வரும்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வருகிறோம். அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் அதை பற்றி சிந்திக்கவே இல்லை. சசிகலா உள்பட 16 பேரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அவர்களில் சசிகலாவை தவிர மற்ற 15 பேரும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சேர்த்துக்கொள்ளவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியை கபளீகரம் செய்ய என்னை பொறுப்பில் இருந்து நீக்கினார்கள்.
தற்போது அவர்களின் பினாமியாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில், இந்த ஆட்சிக்கு முடிவு ஏற்படும். அது தமிழக மக்களுக்கு நல்ல முடிவாக அமையும். விரைவில் ஜெயலலிதாவின் நல்லாட்சி அமையும். தி.மு.க. ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது. தமிழக மக்கள் அ.தி.மு.க. மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் வைத்துள்ளார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா கூட்டத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியுமா, முடியாதா என்பது குறித்து பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அணிகளின் இணைப்பு பற்றி பேச முடியும்.
நம்முடன் விசுவாசமான தொண்டர்களும், மக்களும் உள்ளனர். பொய் சொல்லி, சொல்லி கருணாநிதி உயர்ந்து விட்டார். பொய் சொல்லி, சொல்லி மு.க.ஸ்டாலின் தேய்ந்து விட்டார்.
தற்போது முதல்வர் பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் புதிய கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் மக்கள் மன்றத்திற்கு வரும்போது, மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், மதுசூதனன், முனுசாமி, பாண்டியராஜன் எம்.எல்.ஏ., செம்மலை உள்பட ஏராளமான பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply