எல்லை தாண்டிய மீன்பிடியை மேற்கொண்டால் கைதுகள் தொடரும்
இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டால் கைது செய்வதை தடுக்க இயலாது. எமது மீனவர்களை பாதுகாக்கவே அரசாங்கம் செயற்படுகின்றது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.தடைசெய்யப்பட்ட மீன்டியை நிறுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் நாம் இந்திய தரப்பிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்திய அரசும் ஏற்றுக்கொண்ட விடயத்தை தொடர்ந்தும் செய்யவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் தமிழக மீனவர்களை கைதுசெய்வது மற்றும் தண்டப்பணம் அறவிடப்படல் குறித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் குறித்து இந்திய தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும், கடற்படையினரால் மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை நிறுத்தவும் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். அதேபோல் இருநாட்டு மீனவர்களும் பொதுவான இடத்தில் மீன்பிடிக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் ஏனைய அனைத்து நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையின் சட்டம் நடைமுறையில் இருக்கும். இதில் இந்தியர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகள் வழங்கப்படமுடியாது. எமது வளங்களை பாதுகாக்க வேண்டியதும் எமது மீன் உற்பத்தியை பாதுகாக்க வேண்டியதும் எமது நாட்டின் கடமையாகும்.
அவ்வாறு இருக்கையில் இலங்கையில் நாம் கொண்டுவந்துள்ள சட்டமானது எமது மீனவர்களை பாதுகாக்கவும் எமது நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவ வேண்டுமே தவிர ஏனைய நாடுகளின் நலன்களை மாத்திரம் கவனத்தில் கொள்ளமுடியாது. நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள சட்டமானது சட்டவிரோதமாக உள்நுழைவதை தடுக்கவே தவிர நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை உருவாக்கும் சட்டமூலம் அல்ல.
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடியை மேற்கொள்ள வேண்டாம் என தொடர்ச்சியாக நாம் இந்திய தரப்பினருக்கு வலியுறுத்தி வருகின்றோம். இரு நாடுகளுக்கு இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பில் நாம் பல்வேறுமட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அதன்போதும் நாம் சட்டவிரோத மீன்பிடியை தடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய மத்திய அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மீண்டும் ஒரே தவறை செய்வது எமது மீனவர்களை அதிகம் பாதிக்கும். ஆகவே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கைதுசெய்வதை தடுக்க முடியாது. அதேபோல் படகுகளும் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்தியப் படகுகளை விடுவிக்கக்கோரி ஆரம்பத்தில் இருந்தே கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. நாம் 42 படகுகளை விடுதலை செய்துள்ளோம். எனினும் தொடர்ச்சியாக அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை நாம் அனுமதிப்போம் என ஒருபோதும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் மீண்டும் அவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்ந்தது. தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த செயற்பாடு களை தடுக்க முடியாது. அத்துடன் பொதுவான ஒரு பிரதேசம் என அடையாளப்படு த்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற் கொள்வது கடினமான செயற்பாடாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply