கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறை திரைப்பட ‘கிளைமாக்ஸ்’தான்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
காஞ்சீபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்விழா அரசு சார்பில் வரும் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சவுரிராஜன் முன்னிலை வகித்தார்.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
எத்தனை ஸ்டாலின் வந்தாலும், எத்தனை கமல்ஹாசன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. அ.தி.மு.க. ஆட்சியை குறைகூறி இருவரும் பேசி வருகின்றனர். இது போல தொடர்ந்து பேசி வந்தால் மூன்றாம்பிறை திரைப்படத்தில் வரும் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் நடக்கும் நிகழ்வுதான் கமல்ஹாசனுக்கு ஏற்படும்.
வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து விவாதிக்கப்படும். அப்போது 68 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாடத்திட்டங்களை மாணவர்களின் எதிர் காலத்திற்கேற்ப அமைக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் கல்வித்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளனர். இந்த குழுவினர் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக எளிமையாக பாடத்திட்டங்களை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆலோசனையின் முடிவில் புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
தற்போது தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்-1 மாதிரி வினாத்தாள்கள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும்.
2018-2019-ம் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கும், 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.
தமிழக மாணவர்கள் அனைத்து விதமான பொதுத்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் 54 ஆயிரம் வினா, விடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காட்டுப்பன்றிகள் மூலம் விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வனத்துறை மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்பு ஏற்படும் விவசாய நிலங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பட்டுசேலை தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், எனவே வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூறி கே.யூ.எஸ். சோமசுந்தரம் தலைமையில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடைபெற உள்ள கிளாம்பாக்கத்தில் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்பட பலர் இருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply