அமெரிக்காவை தாக்கியது இர்மா சூறாவளி முன்னெச்சரிக்கையாக 70 லட்சம் பேர் இடம்பெயர்வு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இர்மா சூறாவளி நேற்று தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.கரிபீயன் தீவுகளை சூறையாடிய இர்மா சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நேற்றிரவு தாக்கியது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் 15 அடி உயரத்துக்கு எழும்பின. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. புளோரிடாவின் தெற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. புளோரிடா கீவெஸ்ட் பகுதியில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் தவிக்கின்றனர். 3 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புளோரிடா மாகாணத்தை இர்மா சூறாவளி முழுமையாக கடந்து செல்ல 35 மணி நேரமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவரை பொதுமக்கள் நிவாரண முகாம்களை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாகாண அரசு அறிவுறுத்தியுள்ளது. புளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் வெளியிட்ட அறிக்கையில், இர்மா சூறாவளி பாதிப்பு பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுங்கள். அங்கேயே தங்கியிருந்தால் உயிர் பிழைப்பது அரிது என்று எச்சரித்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களுடன் இந்தியத் தூதரகம் தொடர்பில் இருப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் தெரிவித்தது. மேலும் இந்தியர்களின் உதவிக்காக இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இர்மா சூறாவளி பாதிப்புள்ள பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அமெரிக்கா மற்றும் கரிபீயன் தீவு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உள்ளூர் நிர்வாகங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றன.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply