தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பு : ஜனாதிபதி
தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) பிற்பகல் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்ற ‘இலங்கையில் டெம்பிட விகாரைகள்’ தொடர்பான ஆய்வு நூலை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எமது வரலாற்று மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராமத்திலுள்ள பௌத்த விகாரைகளை பாதுகாத்து அவற்றின் எதிர்கால இருப்புக்காக அனைவரும் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பௌத்த உருவச்சிலைகளின் சிறப்பம்சங்கள் குறித்து களனி பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட உயர் நியமங்களுடன்கூடிய ஆய்வின் பெறுபேறாக இந்த நூல் வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது.
தூண்களின் மீதமைந்த இந்த டெம்பிட்ட விகாரை வலையமைப்பு 177 விகாரைகளைக் கொண்டதாகும். இவை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 100 டெம்பிட்ட விகாரைகளின் தோற்றம், நில அமைப்பு குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் 17 ஆம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதி வரையிலான இலங்கையின் விகாரை பாரம்பரியத்தில் ஏற்பட்ட புத்தெழுச்சிக்கு சான்றுபகரும் இந்த டெம்பிட்ட விகாரை வலையமைப்பினூடாக விரிவான சமூக வாசிப்புக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நூல் நூலாசிரியர் கங்கா ராஜினி திசாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஆய்வுக்குழுவுக்கு ஜனாதிபதியினால் நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.
சியாமோபாலி மகாநிக்காயவின் மல்வத்தை பீடத்தின் அநுநாயக்க தேரர் நியங்கொட விஜிதசிறி தேரரினால் ‘டெம்பிட்ட விகாரையைப் பாதுகாப்பதன் தேசிய முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.
பெங்கமுவே தம்மதின்ன தேரர், சோமாவதி ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய பகமுனே ஸ்ரீ சுமங்களதேரர், சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்ததேரர், பிங்கிரிய தேவகிரி விகாரையின் சங்கைக்குரிய பண்டிவெல சோமரத்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம்.சேமசிங்க உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply