யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டு வைக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் சுந்தர்நகர், காங்ரா ஆகிய இடங்களில் பா.ஜனதா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. அடுத்து பினாமி சொத்துகள் மீது நான் நடவடிக்கை எடுக்க போகிறேன் என்பதை முன்பே அறிந்துதான் அவர்கள் எனக்கு எதிராக இப்போதே பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

நீங்கள்(காங்கிரஸ்) தலைவர்கள் ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடித்த சொத்துகள் அனைத்தையும் திருப்பித் தரவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் அவர்கள் உள்பட யாரும் தப்பி விட முடியாத அளவிற்கு ஒரு நிலையை ஏற்படுத்துவேன்” என்றார்.

பணமதிப்பு நீக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பது குறித்து கடுமையாக தாக்கிய மோடி கூறியதாவது:-

உண்மையிலேயே இந்த நாள் எதிர்க்கட்சிகளுக்கு கருப்பு பண தினம் ஆகும். தலைவர்கள்(காங்கிரஸ்) சிலரிடம் இருந்து இது தொடர்பாக தகவல்களை பெற முயன்றபோது அவர்களில் சிலர் ரூ.500 நோட்டுகளை இழந்ததும், இன்னும் சிலர் ரூ.1,000 நோட்டுகளை இழந்துவிட்டதும் தெரிய வந்தது.

தற்போது பினாமி சொத்து சட்டத்தின்கீழ் மோடி நடவடிக்கை எடுக்க போளிகிறார் என்பது அவர்களுக்கு தெரிகிறது. அவர் நிச்சயம் பினாமி சட்டத்திலும் நல்ல முடிவுகளை வெளியே கொண்டு வருவார் என்பது அந்த தலைவர்களின் கவலையாக உள்ளது.

பினாமி பெயர்களில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள நிலம், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் எதையும் எனது அரசு நடவடிக்கை விட்டு வைக்காது. அதன் காரணமாகவே, பினாமி சொத்து விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுப்பதற்கு முந்திக் கொண்டு, மக்களை தவறான பாதைக்கு திருப்பும் விதமாக கருப்பு தினம் அனுசரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

தலைவர்களில் பலர் தங்களது டிரைவர்கள், சமையல்காரர்கள் பெயரில் கார் மற்றும் வீடு போன்ற சொத்துகளை வாங்கி குவித்து இருக்கிறார்கள். அந்த தலைவர்கள் தங்களுக்கு கீழாக பணிபுரிபவர்களிடம் சொத்துகளை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டால் அப்படி செய்துவிடவேண்டாம் என்று நான் கூறுவேன்.

பினாமி சொத்துகளை அந்த தலைவர்கள் திரும்ப பெற முடியாத நிலையை உருவாக்குவேன். ஏனென்றால் இது மக்கள் பணம். தங்களது சொந்த நலனுக்காக மக்களிடம் இருந்து அவர்கள் கொள்ளையடித்த பணம். 2014-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதற்காகத்தான் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தனர். எனவே, அதை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply