கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி: ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் வரவேற்றனர்
கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு பிரதமர் மோடி இன்று வந்தார், அவரை மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி சால்வை அணிவித்து வரவேற்றனர்.சென்னையில் இன்று (நவம்பர் 6) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியையும் சந்திக்க உள்ளதாக தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான முரளிதரராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக பதிவிட்டிருந்தார்.
அதன் பின்னரே பிரதமரின் நிகழ்ச்சியில் கருணாநிதி சந்திப்பும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா நிகழ்ச்சி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இல்லத் திருமண விழா என இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்தார். விழாவில் கலந்துகொள்ளும் முன்னர் தமிழக வெள்ள நிலவரம் குறித்து முதல்வர், துணை முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். பல்கலைக்கழக விழா முடிந்த பின்னர் சாந்தோம் அருகில் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லத் திருமண விழாவில் கலந்துக்கொண்டார்.
பின்னர் அவர் டெல்லி செல்வதற்கு முன்னர் கோபாலபுரம் வந்தார். கோபாலபுரத்திற்கு பிரதமர் வருவதற்கு முன்னதாக அவரை வரவேற்பதற்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கோபாலபுரம் வந்தார். சரியாக 12.15 க்கு பிரதமர் தனது குண்டு துளைக்காத கறுப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் கோபாலபுரம் வந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உடன் வந்தனர்.
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த பிரதமரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவரது உடல் நலத்தைக் கேட்டறிந்தார்.
மோடி வந்ததை மு.க.ஸ்டாலின் கருணாநிதி காதில் கூறினார், மோடி கருணாநிதியின் தோளில் கைவத்துப் பேசினார். பின்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கருணாநிதியை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமருக்கு முரசொலி பவழ விழா மலரை கருணாநிதி பரிசாக வழங்கினார். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் சரியாக 12.30 மணிக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். அவரை வாசல்வரைவந்து கருணாநிதி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply