ஜெயா டிவி, தினகரன் உள்ளிட்டோர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை

சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் 1800 பேர் 190 இடங்களில் நேற்று காலையில் இந்த சோதனையை தொடங்கினர். இன்னும் பல இடங்களில் சோதனை நிறைவு பெறவில்லை. 2-வது நாளாக நீடிக்கிறது. கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆகியவற்றின் அலுவலகங்களில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன் வீடு நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

சென்னையில் மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா அரங்கம், கிண்டியில் உள்ள அதன் அலுவலகம், அடையாறில் உள்ள தினகரன் வீடு, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீடு, போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டி.வி. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

திருவாரூரில் உள்ள தினகரனின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. பெங்களூர், டெல்லி, புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

இந்த சோதனைக்கு ‘ஆபரே‌ஷன் கிளீன் மணி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. வருமான வரித்துறை வரலாற்றிலேயே இப்படி ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது இதுவே முதல்முறையாகும்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் தொடங்கிய இந்த வேட்டை 24 மணி நேரத்தை கடந்தும் 2-வது நாளாக நீடிக்கிறது. நேற்று இரவு விடிய விடிய வருமான வரி வேட்டை நீடித்தது. சோதனை நடைபெற்ற இடங்களில் வருமான வரி அதிகாரிகள் பலர் அங்கேயே தங்கி இருந்து சோதனையை தொடர்ந்து வருகிறார்கள்.

மத்திய அரசு கடந்த ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தபோது, தொழில் அதிபர்கள் பலர் தாங்கள் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை பல வழிகளில் மாற்றினர். அப்போது பலர் போலியாக நிறுவனங்களை தொடங்கி அதில் பணத்தை முதலீடு செய்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்தியது. இதில் சசிகலா பெயரிலும் பல போலி நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளது. பேன்சி ஸ்டீல் பிரைவேட் லிமிடெட், ரெயின் போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ-தோஹா கெமிக்கல் பார்மா பிரை வேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமானது.

இது தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் வரி ஏய்ப்பு தொடர்பாகவுமே இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மோசடியில் ஜெயா டி.வி.க்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

187 இடங்களில் நேற்று சூறாவளியாய் சுழன்று சோதனை நடத்திய அதிகாரிகள் 40 இடங்களில் தங்களது சோதனையை நேற்று இரவே முடித்து விட்டனர். மீதி உள்ள 147 இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரி வேட்டை நீடிக்கிறது.

இந்த சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகள் கட்டு கட்டாக ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இன்று நடைபெறும் 2-வது நாள் சோதனை முடிந்த பின்னரே அது பற்றிய தகவல்களை வருமானவரித்துறையினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை தொடர்ந்து வெளி மாவட்டங்களிலும் 2-வது நாள் சோதனை நீடிக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply