திருடரை பிடிக்கமுடியாவிட்டால் அரசாங்கம் மன்னிப்புக்கோர வேண்டும்: மனோ

சட்டம்,ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க சுதந்திரக்கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதால், அதனை அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்கு வழங்கியாவது கடந்த ஆட்சிகாலங்களில் மக்கள் பணத்தை சூறையாடிய திருடர்களை கைது செய்யும்படி தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால் மக்கள் பணத்தை கொள்ளையிட்ட திருடர்களைப் பிடிக்க முடியவில்லை என்று ஒப்புகொண்டு ஒட்டுமொத்த மக்களிடத்திலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்புகேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவிடாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை இலக்குவைத்து அதிரடி நடவடிக்கைகளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கொள்வார் என்பதை சுட்டிக்காட்டியே சுதந்திரக் கட்சியினர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொழும்பு மட்டக்குளியில் அமைந்துள்ள போதி சமுத்ரா ராமவிஹாரையில் நடைபெற்ற சமய நிகழ்வில் தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டார்.

விகாரையில் சமய வழிபாட்டிலும் ஈடுபட்ட அமைச்சர் மனோ கணேசன், விகாராதிபதியுடன் கலந்துரையாடலையும் நடத்தினார். அதன் பின்னர் சமகால அரசியல் விவகாரம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply