மனித உரிமை தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் ஊடாக உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வின் போது கனடா வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 3 தசாப்த கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது ஒரு முக்கியமான தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியில் உள்ளதாகவும் உண்மையான நல்லிணக்கம் அடையப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில், பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கனடாவின் எதிர்பார்ப்பை இலங்கை அரசாங்கத்துக்கு இன்று வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெளிவான கால அட்டவணை மற்றும் மூலோபாயத்துக்கு ஏற்ப தமது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், இலங்கை மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்றும் தாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply