புலம்பெயர் தமிழர்களுக்கு அதிர்சியளித்த நல்லாட்சி

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் சிலரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களாக அடையாளப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கம் 14 பேரினது பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களுக்கு தடைகளையும் விதித்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவின் கையொப்பத்துடன்2018 ஆம் ஆண்டு யூன் மாதம் 20 ஆம் திகதி புதன் கிழமையான நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள விசெட வர்த்தமான அறிவித்தலேயே இந்த தடைசெய்யப்பட்டுள்ளோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய சிறிலங்கா அரசு தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்திருக்கின்றது.

மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதை அடுத்து 2016 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டு, எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும் 267 தனி நபர்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட மேலும் எட்டு தமிழ் அமைப்புக்கள் மீதும் 86 தமிழர்கள் மீதும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், 424 தமிழர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தலுக்கு எட்டு தினங்களுக்கு முன்னதாகவே இந்த தடை பட்டியல் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சுவிஸர்லாந்து நீதிமன்றினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலேயே சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் புதிய தடைப்பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பது மற்றும் மீண்டும் அந்த இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பத் துணைபோவதாக குற்றம்சாட்டியே 14 பேர் புதிதாக தடைப்பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கமைய சிறிலங்காவில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply