ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க கூடாதென பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனு தாக்கல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுவிக்க கூடாது என, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது, கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினர் சார்பாகவே நேற்று (புதன்கிழமை) ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி, தமிழகம் ஸ்ரீபெருந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டார்.

இதன்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 13 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததோடு, மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறு குறித்த அசம்பாவித்தின்போது படுகாயமடைந்தவரும், அதன் பின்னரும் தனது பொலிஸ் பணியை தொடர்ந்தவருமான அனுசுயா டெய்சி (ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.) என்னும் அதிகாரி தலைமையில், பாதிக்கப்பட்ட 13 பேரின் குடும்பங்களும் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுநரிடம் மனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த அனுசுயா டெய்சி கூறுகையில்,

“பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. எனவே எங்களுடைய வழக்கிற்கு தீர்ப்பு வரும் வரையில் இந்த மனு மீது பரசீலனை செய்ய வேண்டாம். குற்றவாளிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டாம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்” எனக் கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக 28 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுவபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தமிழக அரசு நீண்டகாலமாக கோரிவந்தது.

இதன் ஒருகட்டமாக தற்போதைய ஜனாதிபதிக்கு, தமிழக அரசு சார்பில் இருமுறை கடிதம் அனுப்பியும் அது நிராகரிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், இம்மாத தொடக்கத்தில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது குறித்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக கூறிய நீதிமன்றம், ஆளுநரின் ஒப்புதலுடன் தமிழக அரசு குறித்த ஏழுபேரையும் விடுவிக்கலாம் என பணித்தது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்ததோடு, அதில் குறித்த ஏழுபேரையும் விடுவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த தீர்மானம் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் இதுவரை ஆளுநர் அனுமதி வழங்காத நிலையில், கடந்த 24 ஆம் திகதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை சந்தித்திருந்தார்.

அதன்போது, தனது மகன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குறித்த ஏழு குற்றவாளிகளையும் விடுவிக்க கூடாது எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை செய்யப்பட்டுள்ளது.

எனினும் அண்மையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், குற்றவாளிகள் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு என இரு தரப்பினர் கோரிக்கைகளையும் கேட்டு இரு தரப்பு நிலையையும் ஆய்வு செய்து அதன் பின்னர் நீதியான முறையில் தீர்வு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply