கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை: சஜித் பிரேமதாச

ஐ.தே.க. தலைவருக்கான நம்பிக்கை பிரேரணை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லையென ஐ.தே.க.வின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவளித்ததால், இரு தரப்பிற்கும் இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட சஜித், அதனை முற்றாக மறுத்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரரணையை தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாம் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யவேண்டியது எமது தார்மீக கடமை. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த உடனே வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 3 வருட காலத்தில் துரதிஷ்டவசமாக எமக்கும் அதனை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது எமது கடமை. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை. எமக்கான கடமை என்ற ரீதியில் அதனை நிறைவேற்றுவோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply