சர்வதேசத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது ஆபத்து : அநுர

சர்வதேச நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துக்கொள்வதானது ஆபத்தான நிலைமைக்கு வழிவகுக்கும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் மிகவும் விசித்திரமான செயற்பாடுகள் இடம்பெறும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மிகப்பெரிய நாடகமொன்று அறங்கேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை பௌத்த நாடு என்றும் அமைச்சர் மங்கள சமரவீர இது பௌத்த நாடு இல்லை என்றும் கூறிக்கொண்டிருக்கும் அதேநேரம், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்னொரு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பிரச்சினைகளை திசைத்திருப்ப, அரசாங்கம் பல்வேறு அங்கங்களாகப் பிரிந்து நாளுக்கு நாள் இவ்வாறான நாடகங்களை அறங்கேற்றிக்கொண்டிருக்கின்றன.

இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும். அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அசமந்தப் போக்குடனேயே செயற்பட்டு வருகிறது. அத்தோடு, சுற்றுலாத்துறை, தனியார் தொழிற்துறை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வீதம் என்பனவும் இந்த அரசாங்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதனால், இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்படுமோ எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தில் பணம் இல்லாமையால், கொள்வனது வீதம் குறைவடைந்து நாட்டின் பொருளாதாரமும் பாரிய வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலையடுத்து அரசாங்கம் பல்வேறு நாடுகளுடனும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், இது இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இந்தத் பயங்கரவாதச் செயற்பாட்டுடன் சர்வதேசத்தை இணைக்க முற்பட்டாலும் அது முற்றிலும் பிழையானது என்பதே எனது கருத்தாகும்.

அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு குறித்து துளியளவும் தெளிவின்மை இல்லாதமையால், சர்வதேச நாடுகளும் இலங்கை விடயத்தில் தலையிட ஆரம்பித்துள்ளன.

பலவீனமடைந்த ஒரு அரசாங்கமே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும். பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இல்லாதொழித்துள்ள அரசாங்கம் ஏன் இன்னமும் ஆட்சியிலிருக்கிறது என்றே தெரியவில்லை” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply