விடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா?

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார்.

துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்குறிப்பிட்ட காணொளிப் பதிவானது முன்பே எடுக்கப்பட்டது என்றும், பழைய பதிவை சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் ஹாமிட் பாடோர் கூறினார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், தமிழீழ ஆதரவுக் காணொளி குறித்தும், அதனை மையப்படுத்தி உள்ள பிரச்சினை தொடர்பாகவும் முன்பே விசாரணை நடந்து முடிந்துள்ளது என்றார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதன் மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அப்துல் ஹாமிட் கூறினார். “இந்தக் காணொளிப் பதிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தக் குறிப்பிட்ட காணொளி மட்டுமல்ல இதேபோல் வேறு சில வழக்குகளும் உள்ளன.

இனிமேல் எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாது. இனம், மதம் மற்றும் அரச அமைப்பை சிதைக்கும் வண்ணம் செயல்படுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹாமிட் மேலும் எச்சரித்தார்.

துணை முதல்வர் ராமசாமி சம்பந்தப்பட்ட காணொளிப் பதிவு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் காவல்துறைக்கு சற்றே அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளை ஆராதிக்கும் செயல்பாடானது மலேசியாவுக்குப் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ ஆகிய இருவரும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதமே இந்தக் காணொளி தொடர்பாக மலேசிய காவல்துறை விசாரணை நடத்த துவங்கியது.

விடுதலைப்புலிகளுடன் ராமசாமி இன்னும் கூட தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டுவதற்கு ஏற்ப இந்தக் காணொளிப் பதிவு அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply