தற்கொலை தளமாக மாறிவரும் கல்லடி பாலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழுக்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிரிட்டன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1924 ஆம் ஆண்டு இந்தப் பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1928 ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அந்தப் பாலத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகவுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள கல்லடி எனும் பிரதேசத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளதால் இதனை ´கல்லடிப் பாலம்´ என்று மக்கள் பரவலாக அழைத்தாலும், ´லேடி மேனிங் பாலம்´ (Lady Manning Bridge) என்பதுதான் இதன் பெயராகும். அப்போதைய இலங்கை ஆளுநர் சர் வில்லியம் ஹென்றி மேனிங் என்பவரின் காலத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டதால், அவரின் மனைவியை கௌரவிக்கும் வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டதாகத் தெரியவருகிறது.
இலங்கையில் நீளமான இரும்புப் பாலமாகவும் இது இருந்துள்ளது என்றும் ஒரு தகவல் உள்ளது.
இவ்வாறான பெருமைகளைக் கொண்ட இந்தப் பாலம் சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டதாலும், தற்கால போக்குவரத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருப்பதாலும், அதற்கு அருகில், சமாந்தரமாக புதிய பாலமொன்று 2013 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, பொதுக் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
அதனால், பழைய இரும்புப் பாலம் தற்போது நடை பாதையாகவும், இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்துக்காகவும் மட்டும் பயன்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த 63 தற்கொலைகளில், 14 தற்கொலைகள் கல்லடிப் பாலத்தில் இடம்பெற்றதாக மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.சரவணபவன் தெரிவிக்கின்றார்.
மேலும், இந்த வருடத்திலும் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து, அதன் கீழுள்ள வாவியில் விழுந்து தற்கொலை செய்தோரின் பட்டியலும் நீண்டு வருகின்றது.
கல்லடி பாலத்திலிருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி குதித்து தற்கொலை செய்து கொண்ட – மட்டக்களப்பு மாவட்டம் நாவக்குடாவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியொருவரின் சடலம் மூன்று நாட்களுக்கு பின்னர் 7 ஆம் திகதி கரையொதுங்கியது.
அதே மாதம் 27 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த ஜுலை மாதம் 3 ஆம் திகதியன்று அதே பாலத்திலிருந்து குதித்து மண்டார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி, மேற்படி பாலத்திலிருந்து குதித்த யுவதியொவருவர் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்களினதும், தற்கொலைக்கு முயற்சித்தவர்களினதும் பட்டியல் நீளமானதாகும்.
எனவே, இந்தப் பாலத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம், அந்த இடத்தை பாதுகாப்பும் பயன்பாடும் மிக்க இடமாக மாற்றுவதற்கான தீர்மானமொன்று மட்டக்களப்பு மாநகர சபையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்தப் பாலத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றவர்களைக் காப்பாற்றுவதற்கு வசதியாக, 24 மணி நேரமும் படகு ரோந்து சேவையை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிப்பதற்கான தீர்மானமும் அன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.ஆர். சரவணபவன் இந்த முன்மொழிவுகளை சமர்ப்பித்தபோது, அதனை ஏகமனதாக சபை அங்கீகரித்து தீர்மானமாக நிறைவேற்றியது.
ஆயினும், இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 7 மாதங்கள் கடந்து விட்டபோதும், இதுவரையில் அவற்றில் எதனையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை.
கல்லடி பாலத்தில் நிகழும் தற்கொலைகளைத் தடுப்பதற்கான யோசனைகள் மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு, அவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட பின்னரும், அவை நடைமுறைக்கு வராத நிலையில், அதே பாலத்தில் மேலும் சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
இது குறித்து மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சரவணபவனை தொடர்பு கொண்டு பேசிய போது, கல்லடிப் பாலத்துக்கு அருகில் சாகசப் பூங்கா (Adventure Park) ஒன்றினை அமைப்பதற்கு வெளிநாட்டு அரசு சாரா நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மிக விரைவில் அதன் நிர்மாண வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆயினும், பாலத்தில் நிகழும் தற்கொலைகளைத் தடுப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு படகுச் சேவையினை உடனடியாக ஆரம்பிப்பதென, மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரையில் தொடங்கப்படவில்லையே எனக் கேட்டபோது, அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், கல்லடிப்பாலத்தில் தற்கொலைகள் எவையும் நிகழவில்லை என்றும், எனவே, கண்காணிப்பு படகுச் சேவை ஆரம்பிக்க வேண்டிய தேவை எழவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், அவர் கூறிய தகவல் தவறானது என்பதை பிபிசி தமிழ் உறுதி செய்து கொண்டது.
மட்டக்களப்பு மாநகரச சபையில் மேற்படி தீர்மானம் கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டு அவை அமல்படுத்தப்படாத நிலையில், மட்டக்களப்பு – கூழாவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜுலை மாதம் 3 ஆம் திகதியன்று அந்தப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்திருந்தார்.
எனவே, இந்த அவலங்களை இல்லாமல் செய்யும் பொருட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, சமூக அக்கறையுடையோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply