போலி வீடியோ காட்சி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் ஆராய்வு

இலங்கைக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் போலி வீடியோ காட்சியை வெளியிட்ட செனல்–4 தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுக்காலை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதை இலகுவில் விடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டிற்கும் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலர் அரசியல் ரீதியில் முன்னெடுத்த சதியாக இது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில வெளிநாட்டு ஊடகங்கள் இவ்வாறான செயற்பாடுகளை இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளமை எம்மை பொறுத்தமட்டில் முதற் தடவையல்ல என்று தெரிவித்த அமைச்சர் இதுபோன்ற பல அனுபவங்கள் உண்டு என்றும் குறிப்பிட்டார். எதிர்காலத்திலும் இதுபோன்ற செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை கோருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply