அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாரில்லை: ஜனாதிபதி
உலக நாடுகளுடன் எமக்கு எந்தவித கோபமும் இல்லை. அதேவேளை அழுத்தங்களுக்கு அடிபணியவோ தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ தயாரில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் சூரியவெவ நகரில் நடைபெற்றபோது இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டைப் பாதுகாப்பது தமது பிரதான பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ நகரில் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் மக்கள் பேரணிக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ, அநுர பிரியதர்ஷன யாப்பா, அதாவுத செனவிரத்ன, ஜீ.எல். பீரிஸ், சம்பிக்க ரணவக்க உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதம், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் எந்தவொரு அழுத்தமும் இல்லாத கெளரவம் மிக்க நாட்டில் சகல மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது நோக்கம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். நாம் யுத்தத்தைக் காரணங்காட்டி எந்தவொரு அபிவிருத்தியையோ மக்கள் நிவாரணங்களையோ நிறுத்தவில்லை. அரச துறையிலும் ஆட்குறைப்பு செய்யவில்லை.
மாறாக நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள் நிர் மாணிக்கப்படுவது இதுவே முதல் தடவை யாகும் என்பதை மக்கள் மறக்கக்கூடாது.
எமக்கெதிராக, எமது படை வீரர் களுக்கெதிராக சர்வதேசம் குற்றச்சாட்டுக்களை சுமத்தும்போது எமது எதிர்க்கட்சியினர் அதற்குத் தூபமிடும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். அதற்குச் சாட்சியமாகத் தகவல் சேகரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். ஜீ.எஸ்.பீ. சலுகையை வழங்கவேண்டாமென்று கூறுகின்றனர். அதனை எவ்வாறு பெற் றுக்கொள்வது என்பது எமக்குத் தெரியும்.
நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். விவசாயம், கிராம அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் என சகலதுறைகளிலும் தற்போது முன் னேற்றம் காணப்படுகிறது.
கல்வியறிவில் நமது நாடு 90 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது நமக்குப் பெரு மையளிக்கிறது. இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாந் தோட்டையிலிருந்து முதல்தர சித்தி மாணவனும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்மொழி மூல முதல்தர மாணவனும் தெரிவாகியிருப்பது நாம் கல்வித் துறையில் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகவுள்ளது.
நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாத்து, ஐக்கியத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு சகல மக்களினதும் பூரண ஆதரவு அவசியம்.
நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு இத்தகைய பயணத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லவும் சகல சவால்களை வெல்லவும் தென் மாகாண மக்கள் எம் மோடு ஒன்றிணைய வேண்டும். எதிர்வரும் 10ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்ஸன் சில்வா உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
இவர்கள் ஜனாதிபதிக்கு வெற்றிலை வழங்கி தமது ஆதரவைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியஅமைச்சர் சமல் ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக அம்பாந் தோட்டை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கெளரவத்துடன் வரவேற்கிறோம்.
அம்பாந்தோட்டை மாவட்டம் இன்று பாரிய அபிவிருத்தி கண்டுவரும் மாவட்ட மாகும். எதிர்கால அபிவிருத்தியைக் கரு த்திற்கொண்டு அம்பாந்தோட்டை மக்கள் எதிர்வரும் 10ம் திகதி வெற்றிலைக்கு வாக்க ளித்து அரசாங்கத்தைப் பலப்படுத்துவது அவசியம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply