அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரின் சமதர்ம கொள்கையை பாராட்டி உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வாழ்த்து

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரராக தெரிவாகியிருக்கும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், இவ்வாறானதொரு நிகழ்வில் முதன்முறையாக ஒரு தமிழரைப் பேச அழைத்தமையினையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் வண. கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பதவியேற்பு நிகழ்வு இலங்கை அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வண.கரகொடயங்கொட மைத்ரீ மூர்த்தி தேரரின் தலைமையில் நேற்று சனிக்கிழமை (7) பி.ப 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றுகையிலேயே சுரேன் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நான் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் இந்த அதிமுக்கிய நிகழ்வுக்காக லண்டனிலிருந்து வந்திருக்கிறேன்.

அவர் அமரபுரபீடத்தின் மகாநாயக்க தேரராகத் தெரிவுசெய்யப்பட்டதையிட்டும், இந்நிகழ்வில் என்னைப் பேச அழைத்தமையினையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறானதொரு மகாநாயக்க தேரரின் நிகழ்வில் இதற்கு முன்னெப்போதும் ஒரு தமிழரைப் பேச அழைத்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

அவ்வாறிருக்கையில் என்னைப் பேச அழைத்தமையானது தேரரின் சமத்துவம் பேணும் போக்கினையே காண்பிக்கிறது.

2010 ஆம் ஆண்டு உலகத்தமிழர் பேரவை நிறுவப்பட்டதிலிருந்து நான் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரை நன்கறிந்திருந்தேன்.

அக்காலப்பகுதியில் தான் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அப்போது அவரை (தேரரை) எமது அமைப்பின் விழாவுக்கு அழைத்தமையை துணிகரமான செயலாகக் கருதினோம்.

ஆனால் அவர் லண்டனுக்கு வந்து எம்மவர்கள் மத்தியில் ‘சமதர்மம்’ குறித்துப்பேசி உண்மையான துணிச்சல் என்றால் என்னவென்று காண்பித்தார் என்று தெரிவித்தார்.

அதேவேளை நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச பௌத்த மாநாட்டின் உதவி பொதுச்செயலாளர் கலாநிதி தமிந்த பொரகே, இந்த மகாநாயக்க தேரர் எனும் அதியுயர் பதவியானது மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பௌத்த ஞானத்துக்காக மாத்திரமன்றி, அவர் இச்சமூகத்துக்கு ஆற்றிய பணிக்காகவும் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கையில் இன, மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதிலும், சர்வதேச ரீதியில் பௌத்த சமயத்தின் பெருமைகளைப் போதிப்பதிலும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பங்களிப்பு குறித்து சுட்டிக்கட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply