இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப் பாடுபட்டவர் அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரர் : சர்வதேச பௌத்தர்கள் வலையமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன

அமரபுர பீடத்தின் 16ஆவது மகாநாயக்க தேரராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மிகக்கடினமாகப் பாடுபட்டதாக சர்வதேச பௌத்தர்கள் வலையமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.

அமரபுர பீடத்தின் 16 ஆவது மகாநாயக்க தேரராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் வண. கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரின் பதவியேற்பு நிகழ்வு இலங்கை அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வண.கரகொடயங்கொட மைத்ரீ மூர்த்தி தேரரின் தலைமையில் நேற்று சனிக்கிழமை (07) பி.ப 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றுகையிலேயே ஹர்ஷ குமார நவரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரருடனான தனது கடந்தகால அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், முதற்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் நல்லெண்ண அடிப்படையில் தாம் அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் பற்றியும், பாதுகாப்பின் நிமித்தம் வவுனியாவைத் தாண்டிச்செல்வதற்கு அரசபடையினர் அனுமதி மறுத்தவேளையில் அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமையில் குறித்தவொரு குழுவினர் மாத்திரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றமை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

அதுமாத்திரமன்றி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அடிக்கடி கிளிநொச்சிக்கு சென்றுவந்த மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மிகக்கடினமாகப் பாடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தாம் ஆனந்த கல்லூரியில் கல்வி பயின்ற காலப்பகுதியில், ‘தமிழர்கள் நாட்டைக் கைப்பற்றப்போகிறார்கள். அதனை நீங்கள் தான் தடுக்கவேண்டும்’ என சில ஆசிரியர்கள் தமக்குப் போதித்ததாகவும், தாம் அதனை தெற்குவாழ் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ததாகவும் தெரிவித்த ஹர்ஷ குமார நவரத்ன, இருப்பினும் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் போன்றவர்களே அக்காலப்பகுதியில் தம்மை சரியான பாதையில் வழிநடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்தோடு அக்காலப்பகுதியில் தாம் அவ்வாறான தவறான முறையில் செயற்பட்டமைக்காகப் பெரிதும் வருந்துவதாகவும் கவலை வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply