இலங்கையின் கிழக்குத் திசையில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

ஆகையினால் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்வதோடு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு ,கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு ,கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply