வாகன விபத்துகளால் நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு

ஏனைய நோய்களுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டில் குடும்பத்தகராறு, உயரமான இடங்களில் இருந்து கீழே விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

அவர்களில் வாகன விபத்துகளுக்கு ஆளாகுவதால் மாத்திரம் நாளாந்தம் சுமார் 8 பேர் உயிரிழப்பதாக தேசிய அவசர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர் கமிந்த விஜேநாயக்க தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய நோய்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் குடும்பத்தகராறு, உயரமான இடங்களில் இருந்து கீழே விழுதல் மற்றும் வாகன விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அவர்களில் வாகன விபத்துகளுக்கு ஆளாகுவதால் மாத்திரம் நாளாந்தம் சுமார் 8 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றால் இந்நாடு பல உழைக்கும் வர்க்கத்தினரை துரதிஷ்டவசமாக இழந்து வருகிறது.

விபத்துக்களின் போது உரிய நேரத்தில் உரிய முறையில் நோயாளியை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியம்.

நோயாளியின் உடலை கிடையாக கிடத்தி அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதன்போது அம்பியுலன்ஸ் சேவை மற்றும் தாராளமான இடவசதி உள்ள தனியார் வாகனங்களை பயன்படுத்தலாம். எனினும் முச்சக்கர வண்டிகளில் நோயாளர்களை அழைத்துச் செல்வது உரிய முறையல்ல.

இதனால் சுவாச சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வாறெனினும் விபத்துக்களின் போது முன்வந்து உதவக் கூடியவர்களில் முதன்மையானவர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள் என்பதையும் நினைவுக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

விபத்துக்களுக்கு ஆளாகும் பட்சத்தில் முதல் பத்து நிமிடங்கள் நோயாளியின் உயிர்காப்பில் முக்கிய காலமாகும். அதையடுத்து முதல் ஒரு மணித்தியாலம் சிகிச்சைக்கான பொற்காலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இக்காலப்பகுதியில் நோயாளிக்கு உரிய சிகிச்சைகளை வழங்காது விடின் உயிரிழப்பு அல்லது பாரிய தீங்கு ஏற்பட கூடும். ஆகையால் நோயாளியை குறிப்பிட்ட நேரத்திற்குள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியம் என்றார்.

இதேவேளை அவசர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் இனுக விஜேகுணவர்தன உரையாற்றுகையில்,

வைத்தியசாலை கட்டமைப்பில் நோயாளர்களின் உயிர் பாதுகாப்புக்காக ஒழுங்கமைக்கப்பட்ட விசேட பிரிவு அவசர சிகிச்சைப் பிரிவாகும். நோய் நிலைமையை பொறுத்து ஒவ்வொரு வீடுகளிலும் நோயாளர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

இது வைத்திய சாலைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாரடைப்பு, பாரிசவாதம், வாகன விபத்து, டெங்கு எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நுண்ணுயிர் கிருமிகளின் பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறு போன்றன அவசர சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டிய நோய்களாகும்.

அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நோயாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாட்டில் உள்ளது. அவர்கள் நோயாளியை பரிசோதித்து விரைந்து உரிய பிரிவுக்கு அழைத்து வருவார்கள்.

தனியார் வாகனங்களில் நோயாளிகளை அழைத்து வந்து பொதுமக்கள் இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. 2030 ஆம் ஆண்டாகும் போது 65 வயதுக்கும் மேற்பட்ட அதிக முதியோர் சதவீதத்தைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தரவரிசைப்படுத்தப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply