புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன : ஜீ.எல்.பீரிஸ்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளையும், சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் தடுத்து நிறுத்தும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் சந்தையில் இலங்கைப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை முடக்குவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக தெரிவிக்கும் வகையிலான சில புகைப்படங்களை அண்மையில் புலி ஆதரவு அமைப்புக்கள் வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் நிலவுவதாகவும், இவை இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான போலிப் பிரச்சாரங்களுக்கு இந்த புகைப்படப் பிரச்சாரம் ஓர் சிறந்த முன்னுதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவு அமைப்புக்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குறப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட காலத்திலும் இவ்வாறான போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply