இனி உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்க முடியாது : டக்ளஸ் தேவானந்தா

இது எமது அரசாங்கம் இனிமேல் இங்கு உயர்பாதுகாப்பு வலயமென்று ஒன்றில்லை. இராணுவ முகாம்கள் தேவை கருதி இருக்கலாம் என்றும் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போதும் இக்கருத்தையே தான் முன்வைத்ததாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் இதனை நாம் எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கக் கூடாதென்றும் தெரிவித்ததுடன் மேற்படி வவுனியா கூட்டத்தில் ஜனாதிபதி அவர்களும் இதையே மேற்கோள்காட்டி உரையாற்றியதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கடந்த காலங்களில் தெரிந்தோ தெரியாமலோ அழிவுக்காக புலம்பெயர் சமூகத்தின் ஒருசரார் உதவிபுரிந்திருந்தனர். இனி எதிர்காலங்களில் எமது மக்களின் அபிவிருத்திக்காகவும் ஆக்கத்திற்காகவும் இவர்கள் உதவி ஒத்தாசைகளைப் புரிய வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பளைப் பகுதியில் அமையப் பெற்றுள்ள இலங்கைத் திருச்சபை தேவாலயத்தில் பச்சிலைப்பள்ளி மேற்கு பிரதேச மக்களுடனான சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் நாம் எதிர்ப்பரசியலை விடுத்து இணக்க அரசியல் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம். அதிலும் அரசியலுக்காக நாம் ஒருபோதும் மக்கள் பணி செய்யவில்லை என்பதுடன் மக்களுக்கு உதவுவதே எமது நோக்கமாகும்.

நன்றிக்காகவும் அரசியல் சுயலாபத்திற்காகவும் நாம் அரசியலில் பங்கெடுக்கவில்லை. மக்களது சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் வளமான வாழ்வுக்காகவுமே எமது அரசியல் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றுள்ள சுமூகமானதொரு சூழ்நிலைக்கு தமிழ்ச் சமூகம் அளவுக்கதிகமான விலையைக் கொடுத்துள்ளது. இதனால் அவர்களது மீள்வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எப்போது, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்றிருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையை அகற்றி இன்று சுமுகமானதொரு சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ள ஜனாதிபதி அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலர் உட்பட உரிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாம் பெற்றுக் கொண்டுள்ள இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் இதனை நாம் எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கக் கூடாதென்றும் ஓர் ஒளிமயமான வாழ்க்கை எமது மக்கள் முன்பாக இருப்பதையும் வலியுறுத்திக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பச்சிலைப்பள்ளி மேற்கு பிரதேச மக்களது மீள்குடியமர்வு அவர்களது கோரிக்கைகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அடுத்த மாதம் 07ம் திகதி உயர்மட்ட மாநாடொன்றை நடத்துவது என்றும் அதன்போது மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராயப்படுமெனவும் குறிப்பிட்ட பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முகமாலை கிளாலி இத்தாவில் இந்திரபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள மிதிவெடிகளை அகற்றி அப்பகுதியில் மக்கள் மீள்குடியமர்வதற்கு இன்னும் சில காலம் செல்லும் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆண்கள் பெண்களுக்காக 50 துவிச்சக்கர வண்டிகள் எதிர்வரும் 07ம் திகதி வழங்கப்படுமெனவும் ஏனைய கோரிக்கைகள் தேவைகள் தொடர்பில் உயர்மட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்படுமென்றும் யாருக்கும் பயப்படாத சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்பதே தமதும் ஜனாதிபதி அவர்களது விருப்பமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் அங்கு தெரிவித்தாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply