ஆணைக்குழு என்பது கேலி நாம் சாட்சியமளிக்க மாட்டோம் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

தமிழ் தேசத்தின் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது இலங்கை அரசாகும். அவற்றை செய்துவிட்டு அது தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அது ஒரு கேலிக்குரியதாகும். அவ்வாறு நடத்தினால் கூட அந்த விசாரணைகள் நீதி நியாயம் வழங்கும் வகையில் பக்கச் சார்பற்றதாக இருக்க முடியாது என்பதே உண்மையாகும். இதனை நீரூபிப்பதற்கு கடந்த 60 வருடங்களாக அளவுக்கு அதிகமான சான்றுகள் உள்ளன.

இத்தகைய நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பது கண்துடைப்பாகும். இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் நடவடிக்கை காலத்தை இழுத்தடித்தது. எவ்வித பலனையும் தராத ஏமாற்றும் முயற்சிகளாகவே நடந்து முடிந்தன.

ஆணைக்குழுவிடம் சாட்சியங்களை அளிக்கக் கூடிய பாதுகாப்பான சூழல் இல்லை. இன்னமும் கடத்தல்கள் கொலைகள் கொலை மிரட்டல்கள் என்பன தொடர்சியாக இடம்பெற்று வருவது இந்த அச்ச சூழலை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் ஆணைக்குழுவுக்கு படுகொலை சம்பந்தமாகவோ அல்லது குறைந்த பட்சம் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பாகவோ விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிப்பதில்லையென தீர்மானித்துள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் சாட்சியமளிக்குமாயின் அது இனப்படுகொலையை மூடி மறைக்கும் செயல்பாட்டுக்கு துணைபோவதாகவே அமையுமென சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply