வதந்திகள் மூலம் ஒருபோதும் அரசைக் கவிழ்க்க முடியாது : ஜனாதிபதி
வதந்திகளால் ஒருபோதும் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.மார்ச் மாதம் 17ம் திகதி நடக்கவிருப்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தலேயன்றி ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் நடைபெற நீண்ட காலமுள்ளது. அதுவரைக்கும் ஆட்சிலிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப எதிரணியினர் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாகக் காட்ட முயற்சி செய்கின்றனர். இதில், எதுவிதமான உண்மையுமே இல்லை. ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தல்கள் நடைபெற நீண்டகாலமுள்ளது.
அதனால் அதுவரைக்கும் ஆட்சியிலிரு க்கும் அரசுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
தனிநபர், குடும்பம், கிராமம், நாடு என்ற அடிப்படையில் நாம் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். ஆனால் அன்று நாம் இவ்வாறு கூடிக் கதைப்பதற்கு பெரிதும் அஞ்சினோம். குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பயந்தோம்.
அப்படியான யுகம் இருந்தது. இதற்கு காரணமான யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். இன்று எமது மக்கள் அச்சம், பீதியின்றி நடமாடக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
இப்போது, இந்நாட்டு மக்கள் எல்லாவிதமான சுதந்திரங்களையும் அனுபவிக்கின்றார்கள். இருந்தும் இதனைச் சிலர் பொறுத்துகொள்ளுகிறார்கள் இல்லை. நாட்டு மக்கள் எம்முடன் கைகோர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பொறுக்க முடியாத இவர்கள் வெளிநாட்டு சக்திகளுக்குக் கூறி அவர்கள் ஊடாக எமக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றார்கள்.
யுத்த நீதிமன்றத்திற்கு எம்மைக் கொண்டு செல்ல வேண்டுமெனக் கூறுகின்றனர். எம்மை ஏதாவதொரு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒழுங்குமுறை உள்ளது.
எவர் குற்றம் செய்தாலும் தண்டனை வழங்க முடியும். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எம்மிடம் வசதியுள்ளது.
இருந்த போதிலும் எமது அரசாங்கம் செய்த குற்றம் என்ன? புலிப் பயங்கரவாதத்தை ஒழித்தது குற்றமா? துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்தது தவறா? நாட்டில் சமத்துவத்தையும், அச்சம், பீதியின்றி வாழக்கூடிய சூழலையும் ஏற்படுத்தியது தவறா? இவை தொடர்பாகவே பெரிதாக குரல் எழுப்புகிறார்கள்.
எமது படைவீரர்களை மானசீக ரீதியாக வீழ்த்துவதற்குப் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். கிளிநொச்சி
போவதாகக் கூறி மதவாச்சி போகிறார்கள் என்றும் ஆனையிறவு போவதாகக் கூறி பாமன்கடை போகின்றார்கள் என்றும் கூறினார்கள். இவற்றின் ஊடாக எமது படையினரை மானசீக ரீதியாக வீழ்த்தவும், எமது மக்கள் மத்தியில் அச்சம், பீதியை ஏற்படுத்தவுமே அவர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களது முயற்சிகள் பலிக்கவில்லை. இப்போது இவர்கள் எமது தாயகத்திற்காக விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களை மானசீக ரீதியாக வீழ்த்த முயற்சி செய்கின்றார்கள். இதற்காக வெவ்வேறு விதமான கதைகளைக் கூறுகின்றார்கள்.
நாம் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லுகின்றோம். வதந்திகள் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது. அண்மையில் நான் இந்திய எதிரணி தலைவரைச் சந்தித்தேன். அப்போது அவர் நாம் நாட்டுக்குள் தான் எதிர்க்கட்சியாக செயற்படுகின்றோம். ஆனால் நாடுக்கு வெளியே உலகின் முன்பாக ஒரே குரலாகவே ஒலிக்கின்றோம். மாறாக அரசாங்கம், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அல்ல என்று தெரிவித்தார். இதேபோல் எமது நாட்டு எதிரணியும் உலகின் முன்பாக செயற்பட வேண்டும். எமது எதிர்க்கட்சி அவ்வாறு இல்லை. அவர்கள் தேவையற்ற முறையில் எம்மை உலகின் முன் காட்டிக் கொடுக்கின்றார்கள். நாட்டு மக்கள் அவர்களை ஒதுக்கியுள்ளதால் அவர்களால் நாட்டுக்குள் நேரடியாக செயற்பட முடியாதிருக்கின்றது. அதனாலேயே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
எமது அரசாங்கம் வலுவானது. எமது பயணம் முன்நோக்கி நகருகின்றது. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி துரித அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காகப் பாரிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன இவற்றை நாட்டு மக்களால் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஆகவே நாம் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த், தினேஷ் குணவர்த்தன, சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், துமிந்த சில்வா, ஜே. ஆர். பி. சூரிய பெரும, திலங்க சுமதிபால உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply