தமிழ் நாட்டில் புலிகளின் இரகசிய பயிற்சி முகாம்கள் : பிரதமர் தி. மு. ஜயரட்ண
இந்திய அரசியல் தலைவர்களை படுகொலை செய்யும் எண்ணத்துடனும், இலங்கையில் மீண்டும் புலிகள் இயக்கத்தை செயற்பட வைக்கும் நோக்குடனும் தமிழ் நாட்டில் புலிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் இரகசியமாக இயங்கிவருவதாகப் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரட்ண தெரிவித்தார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் அவசர காலச்சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசுகையில்:-
தமிழ் நாட்டில் இரகசியமாக இயங்கும் மூன்று இரகசிய முகாம்களில் ஒன்றில் பயிற்சி பெற்றுவரும் புலிகளுக்கு பிரபுக்கள், மற்றும் அரசியல் தலைவர்களை படுகொலை செய்வது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் எட்டியுள்ளன. புலிகளின் இந்த செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பொட்டு அம்மானின் சகாவான புகழேந்தி மாஸ்டர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையிலுள்ள மகாபோதி மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளும் இவர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் புலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இன்று புலிகள் இயக்கம் மூன்று முக்கிய நபர்களை பிரதானமாகக் கொண்டு மீண்டும் உயிர்பெற்று வருகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் ருத்ர குமாரணை தலைமையாகக் கொண்டும் நோர்வேயில் நெடியவனை தலைமையாகக் கொண்டும், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விநாயகம் என்பவரை தலைமையாகக் கொண்டு, இந்தியாவில் உயிர்ப்பெறுகிறது.
இலங்கையில் மீண்டும் சிறிய அளவில் கலவர நிலையை உருவாக்குவதே இவர்களின் அடுத்த கட்ட பிரதான இலக்காக இருக்கின்றது.
இவ்வாறான ஒரு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் கஞ்சிகுடிச்சாறு பகுதியிலும் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பலசுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
மீண்டும் தொடர்ந்தும் பேச்சு நடத்தவும் ஆயத்தமாக இருக்கிறோம்.
வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கவும் அந்த நாடுகள் ஆயத்தமாகவுள்ளன. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அந்த நாடுகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவது சர்வதேச ரீதியில் இலங்கை அரசின் மேல் கொண்டுள்ள நல்லெண்ணத்தையே வெளிக்காட்டுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply