மனுக்குலத்தின் பாவங்களுக்காக தன்னையே பலியாக்கிய இறைமகன்!

பிறப்பின் அனைத்து உயிர்களுக்கும் எம் பரமதந்தையின் ஏக மைந்தனாகிய கிறிஸ்துவின் மரணத்தை தியானிக்கும் பெரிய வெள்ளி இன்றாகும். இன்றைய நாளை உரிய முறையில் அனுசரித்து கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக நாம் வாழ வேண்டும். மன்னிப்பு, கருணை, தயாளம், மீட்புப் பெறுதல் என்பன எம்மை பாவத்திலிருந்து மீட்க மீட்பராம் இயேசுகிறிஸ்து மண்ணக வாழ்வில் எமக்கு அருளிய நற்செய்தியாகும். அவர் எமக்கருளிய நற்செய்தி எனும் அருங்கொடையை எம் இதயத்தில் வாஞ்சையுடன் ஏற்று இன்னும் அதிகம் அதிகமாய் பற்றிப்பிடித்து நடப்பதே இத்தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய அரும்பெரும் தவமுயற்சியாகும்.

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் தொடங்கி அவரின் இறப்பு, உயிர்ப்பு வரை அவரது ஒவ்வொரு அசைவும் உலக மாந்தர்களுக்கு நற்செய்தியாக விளங்கியது. ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த அவரது எளிமையான பிறப்பின் மூலம் எமது வாழ்க்கை எளிமை மிகுந்ததாக விளங்கவேண்டும் என்ற நற்செய்தி மனித குலத்திற்கு தரப்பட்டுள்ளது. வறியோரை நாடிச் சென்ற அவரது தயாள குணம், கருணை உள்ளம் கொண்டவர்களாக நாம் வாழும் வழிகளை உணர்த்தி நிற்கிறது. அவர் பாவிகளை நாடிச் சென்றமையானது மன்னிப்பு எனும் இரக்க குணத்தை எம் மத்தியில் மலரச் செய்கிறது. தன் பெற்றோருக்கு கீழ்ப் படிந்தமையானது பெற்றோரை கனம் பண்ணுதல் எனும் மகத்துவம் உணர்த்தப்படுகிறது.

மேன் மக்கள் என்ற மமதையை சிதறடித்தமையானது படைப்பின் அனைத்து உயிர்களும் சமம் என்ற சமத்துவத்தை வலியுறுத்தி நிற்கிறது.அலைக்கழிக்கப்பட்டோரை விடுவித்தமையானது, இறைவனுக்கு சொந்தமான மனித குலத்தை ஆட்படுத்திக் கொள்ளும் அசுத்த ஆவிகளின் கட்டுக்களிலிருந்து விடுதலையடையும் வல்லமையுணர்வை உணர்த்துகிறது.மரித்தோரை உயிர்ப்பித்தமையானது மரணம் ஒரு நிகழ்வே. அதிலிருந்து உங்களை மீட்பேன் என்ற உறுதி மிக்க செய்தியாக எமக்கு தரப்படுகிறது. அவர் தம் உயிரை தியாகம் செய்தமையானது பரம தந்தையினால் படைக்கப்பட்ட மனித குலத்தின் மீது அவர் வைத்த அளவற்ற அன்பை காட்டுகிறது.

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் உயிர்ப்பும் நாம் வாழும் உலகில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சாதாரண நிகழ்வல்ல. அவரின் பிறப்பானது ஆதியில் இறைவன் தன் மக்களுக்கு வாக்களித்த படியே இம் மண்ணுலகம் சுகிர்ந்த அனுபவித்த மாபெரும் கொடையாகும். அக் கொடையின் தாராளத்தை, தயாளத்தை மென்மேலும் பற்றிப்பிடித்து நடக்கும் காலமே தவக்காலம். கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்பதற்கு அடையாளமாக திருச்சிலுவை எமக்கு தரப்பட்டுள்ளது. இது வெறுமனே நெற்றியில் இடும் அடையாளமல்ல.ஒரு நாடு, ஒரு சமூகம் , ஒரு குடும்பம் என்ற ரீதியில் பிரச்சினைகள், குழப்பங்கள், துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் எம்மை ஆட்கொள்ளும் போது சேர்ந்து போகாதவர்களாக அதனை தாங்கிக் கொள்ளும் வலிமையை தரும் மீட்பின் அடையாளமாக திருச்சிலுவை விளங்குகிறது.

அன்று சபிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், பாவிகளென தீர்ப்பிடப்பட்டோரின் மரணத்திற்கு ஏற்ற கழுமரமாக சிலுவை அடையாளத்தை யூதர்கள் கண்டனர். அதில் தொங்கவிடப்பட்டு மரணத்தை தழுவிக்கொள்வோர் சபிக்கப்பட்டவர்களாக ஏளனம் செய்யப்பட்டனர். சிலுவையானது பாவிகளை மீட்கும் இரட்சிப்பின் அடையாளமாக மாறும் என அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இறைவனின் கட்டளையை மீறிய மனித குலத்தின் பாவங்களை பாரச்சிலுவையாக தன் தோள் மேல் சுமந்த மனுமகன் இயேசு அதை மீட்பின் அடையாளமாக மாற்றினார். சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட அவர் மரணத்தை வெற்றி கொண்டார். இவையனைத்தும் மனித குல மீட்புக்காக நடந்தேறியவை மீட்பராம் கிறிஸ்துவின் பாடுகளை, அவர்பட்ட துயரங்களை எம் இதயத்திற்கு ஏற்ற குறைகளை களைந்து பாவச் சேற்றிலிருந்து விடுதலை பெற்று மீட்பினை நோக்கிய பாதையில் பயணிப்போம். அன்று கல்வாரியில் எமது பாவங்களுக்காக சிந்தப்பட்ட தூய செம்மறியான இறைமைந்தன் கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் வழியாக மீட்புப் பெறுவோம். அவருக்கு சாட்சியாக விளங்குவோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply