தேர்தல் முறைகேடுகள் குடாநாட்டில் அதிகரிப்பு
யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நீதியான தேர்தல் தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கையிழந்துள்ளன. எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் முறைகேடுகள் அரங்கேற்றப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி தரப்புகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமை, குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன் வைக்காத போதிலும் அதன் வேட்பாளர்கள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் சீற்றங் கொண்டுள்ளனர். கிராம மட்டங்களில் சாதாரண பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்குகூட பொலிஸார் அனுமதிக்கிறார்களில்லை. வாரக்கணக்கில் அலைந்து, திரிந்தும் வெறும் கையுடனே திரும்ப வேண்டியிருக்கின்றதென்கிறார் எஸ். கிருபாகரன். இவர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கரவெட்டி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளார். சிலவேளைகளில் அவர்கள் ஆலோசனைகளைக் கூட வழங்குகின்றனர்.
கூட்டங்கள் மீது தாக்குதல் நடந்தால் எதுவுமே செய்ய முடியாதமையால் நீங்கள் வீடு வீடாகப் போய் ஆதரவு கேட்பதே நல்லதென்கிறார்கள் பொலிஸ் அதிகாரிகள்.
பிரசாரக் கூட்டங்கள், தேர்தல் சுவரெட்டிகளென பெரும்பாலான பிரசார வழிகள் கூட்டமைப்பினருக்கு அடைக்கப்பட்டேயுள்ளன. ஒட்டப்படுகின்ற எங்கள் சுவரொட்டிகள், இரவோடிரவாக கிழிக்கப்பட்டு விடுகின்றன. சிலவேளையில் கழிவு ஓயில்கள் ஊற்றப்பட்டும் விடுகின்றன. இராணுவ முகாம்கள், காவலரண்கள் உள்ள இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளுக்குக் கூட இதே நிலைதான். ஆனால் வீதியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் வெற்றிலை சுவரொட்டிகள் எத்தனை நாளானாலும் பாதுகாப்பாகவே இருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளார். அதேபோன்று 13 இற்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்களும், பகுதி பிரித்து பிரசாரங்களில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் பாதுகாப்புடன் வீதிகள், ஒழுங்கைகளென அமைச்சர்களது வாகனங்கள் சுற்றிச் சுழன்று வருகின்றன. அமைச்சர் பஸில் ராஜஷபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் இணைந்து அரச விழாக்களை நாள் முழுவதும் நடத்தியே வருகின்றனர். வீதிக்கு கார்பெட் போடுவதிலிருந்து குடிநீர் குழாய் புதைப்பது, கட்டிடங்களை திறப்பதென அரச விழாக்கள் களை கட்டுகின்றன.
பாட்சாலைக் கட்டிட திறப்பு விழாவிற்காக, ஏற்கனவே இயங்கி வந்த வகுப்பறைகள் பலவும், மாணவர்கள் விரட்டப்பட்டு மை பூசித் தயாராகியுள்ளன. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆளுநரால் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்ட கட்டிடங்கள் கூட மீண்டும் பொலிவாக்கப்பட்டு அமைச்சர்களால் மீளவும் திறக்கப்பட்டு வருகின்றது. உள்ளூர் திணைக்கள அதிகாரிகள் தாம் அச்சுறுத்தப்படுவதாக கவலை கொண்டுள்ளனர். அரசின் சாதனைகள் பற்றியும், அமைச்சர்களது நிகழ்ச்சி நிரல்கள் பற்றியும் நாள் தோறும் விளம்பரப்படுத்துமாறு. அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விளம்பரப் பலகைகளை நட்டு வைப்பதற்கும், திரை நீக்கம் செய்வதற்கான நடுகற்களை அமைக்கவுமென பெரும்பாலான திணைக்களங்கள் கடந்த சில காலங்களாகத் திண்டாடிக் கொண்டேயிருக்கின்றன.
கூட்டமைப்பினரது தேர்தல் பிரசாரங்கள் பெரும்பாலும் முடக்கப்பட்டேயுள்ளது. தீவகப் பகுதியில், கூட்டமைப்பின் பிரசாரங்களென எதுவுமேயில்லை. இன்றைய தினம், யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சகிதம் தீவகப் பகுதிக்கு பிரசாரத்திற்கு செல்ல முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால் நெடுந்தீவுப் பகுதி பிரசாரத்திற்குச் செல்ல எவருமே சம்மதித்திருக்கவில்லையென கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. கிழக்கு மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படை தளபதியுமான மோஹான் விஜயவிக்கிரம, அரசின் முகவராக நெடுந்தீவில் தங்கி நின்று பணியாற்றி வருகின்றார். அரச நியமனம் பெற்ற அதிகாரியான ஆளுநர் இவ்வாறு பணியாற்றுவதே இங்கேயே என நையாண்டியாக கூறுகிறார் கே. சிவாஜிலிங்கம்.
ஆளும் தரப்பின் தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் தொடர்பிலும், படைத் தரப்பிலும் தலையீடுகள், பொலிஸாரது கையாலாகாமை தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டியே வருகின்றது. தேர்தல் ஆணையாளரது பணிப்பின் பேரில் வந்து திரும்பும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், இவற்றை பதிவு செய்து செய்வதை தவிர வேறு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. வாக்களிப்பு தினத்தன்று பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படலாமென்ற அச்சமும் உள்ளதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply