இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிறுத்த கோரிக்கை

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரும் ஒரு தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி ஒன்றில் வியாழனன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை 2009ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு பொறுப்பு சுமத்தும் நடவடிக்கையை இலங்கை எடுக்காதவரை நிதி உதவி நிறுத்தப்பட வேண்டும் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகார கமிட்டியினால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைக்கு மனித நேய உதவி, நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவி மற்றும் ஜனநாயகம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவி ஆகியவை தவிர, பிற விதமான உதவிகள் அனைத்தையும் நிறுத்துகின்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கவலைதரும் இலங்கையின் முக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அத்தாட்சி தந்தால் மட்டுமே, உதவி வழங்கப்பட வேண்டும் என ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஹோவர்ட் பெர்மன் அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானம் கூறுகிறது.

இலங்கையின் உள்நாட்டுப்போரின் கடைசி கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்களையும் மற்றும் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களையும் விசாரித்து தண்டிப்பது என்பதும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். போர்க்குற்றங்களுடன் தொடர்புடையோர் என்போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் புலிக் கிளர்ச்சியாளர்களும் அடங்குவர்.

பத்திரிகை சுதந்திரம், அவசரகால சட்டங்களை ரத்து செய்தல், போரின் இறுதிக் கட்டங்களில் காணாமல் போன மக்களின் கதி குறித்து அரசு தகவல் தருவது போன்றவை மற்ற பிரச்சினைகளாக் காட்டப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு துறையானது 2010ம் ஆண்டில் மட்டுமே இலங்கைக்கென 13 மில்லியன் டாலர்கள் உதவி கோரியிருந்தது.

கமிட்டியின் தீர்மான வாக்கெடுப்புக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்களிடையே பரந்துபட்ட ஆதரவுகாணப்பட்டது.

ஆனால் இந்த வாக்கெடுப்பு உடனடியாக அமலுக்கு வராது. அக்டோபர் மாதத்தில் தொடங்கும் அடுத்த நிதியாண்டு செலவினங்களுக்கான கோரிக்கைகளில் ஒரு திருத்தமாக இது கொண்டுவரப்பட்டுள்ளது.

இறுதியான நிதி உதவி என்பது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரு அவைகளிலும் நடத்தப்படுகின்ற நீண்டதொரு விவாதத்துக்குப் பின்னரே முடிவு செய்யப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply