வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை : பவ்ரல்
அரசியல் கட்சிகள் தேர்தல் சட்டங்களை மீறி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதால் பொதுமக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு உள்ளூராட்சி தேர்தலின் போது மக்களால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது என்று பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் பொலிஸார் தோல்வி கண்டுள்ளனர். எவ்வாறாயினும் இன்று வெள்ளிக்கிழமை காலையிலேயே பொதுமக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும். வடக்கு மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டை இல்லாவிடினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கூடிய ஆவணத்தை கொண்டு சென்று வாக்களிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மருதானை ஜீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஃபவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டியாராச்சி கூறுகையில், இன்று சனிக்கிழமை ஒரு மாநகர சபை, 9 நகர சபை, 55 பிரதேச சபைகள் என 65 உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடைபெறுகின்றது. இத் தேர்தலில் வடக்கு உட்பட 2, 630, 985 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த உள்ளூராட்சி தேர்தலில் 20 அரசியல் கட்சிகளும் 75 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதுடன் 5688 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் தரப்பு உட்பட அரசியல் கட்சிகள் பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்காது செயற்படுகின்றது. குறிப்பாக வடக்கின் நிலை மிகவும் மோசமானதாகவே அமைகின்றது. ஆளும் தரப்பின் வேட்பாளர்கள் தேர்தல் சட்டங்களை மதிக்காது நேற்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பொலிசாரால் தேர்தல் சட்டங்களை பாதுகாக்க முடியாததற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் காலையிலேயே சென்று தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சேவை செய்யக் கூடிய உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். வன்முறையாளர்கள் மோசடிக்காரர்களை மக்கள் இத் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply