20 சபைகளுக்கு இன்று வாக்களிப்பு தமிழரின் முடிவுக்காக உலகமே காத்திருக்கின்றது

முழு உலகமும் எதிர்பார்க்கும் வடமாகாணத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது நாளை காலை தெரியவரும். இந்தத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகின்றது. 20 மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், வடக்கின் 20 உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டு வருகிறது.

இலங்கைத் தேர்தல் சரித்திரத்தில் முதன் முறையாக யாழ்.மக்களுக்கு வேட்டிகள், பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அது மட்டுமின்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் தாராளமாக உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சுமந்துகின்றன. இதேவேளை, இராணுவத்தினரும்அரசுக்கு சார்பாக இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்று இராணுவத்தினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காகத் தேர்தல் முகவர்களாக செயற்பட ஆட்களைத் தேடித் திரிந்தனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் வரலாற்றில் முதல் முறையாக இராணுவம் ஈடுபட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அரசின் பக்கம் இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி தமிழ் மக்கள் மீது தாம் முன்வைக்கும் அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த அரசு முனைகின்றது என புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இருபது மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல்கள் நடைபெறும் போதும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் பட்டாளம் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. யாழ்., கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் ஜனாதிபதி பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply