இராணுவத் தளபதியின் கூற்று நிராகரிக்கப்பட வேண்டியது: த.தே. கூ
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தையும் முகாம்களையும் அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற இவ்வேளையில், தற்காலிக முகாம்களை நிலையான முகாம்களாக மாற்றியமைப்பதான இராணுவத் தளபதியின் அறிவிப்பு தேவையற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் ஒன்றுக்கான தேவை அற்றுப் போயுள்ள நிலையில் படை முகாம்களுக்கõன தேவை எதற்காக என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 62 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்து உரையாற்றிய இராணுவத்தளபதி, நாட்டிலுள்ள தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப்படவிருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்களை நிறுவ வேண்டிய தேவை தற்போது இல்லை. இருப்பினும் வடக்கு கிழக்கில் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக இராணுவ முகாம்களும் பாரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிவில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டுதான் வடக்கு கிழக்கில் அமையப் பெற்றுள்ள தற்காலிக இராணுவ முகாம்களையும் குவித்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தையும் அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றது.
தற்காலிக இராணுவ முகாம்கள் எனும் போது அவை வடக்கு கிழக்கிலேயே அமையப் பெற்றுள்ளன. எனவே இராணுவத் தளபதியின் கூற்றின் பிரகாரம் வடக்கு கிழக்கில் உள்ள தற்காலிக இராணுவ முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றியமைக்க வேண்டிய தேவை எதற்காக என்ற கேள்வி எழுகின்றது.
எனவே, இராணுவத் தளபதியின் கூற்று ஏற்றுக் கொள்ள முடியாததும் அதேநேரம் அந்த கூற்று நிராகரிக்கப்பட வேண்டியதுமாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply