புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார்? புதிய ஆவணத் திரைப்படத்தில் உண்மைக் காட்சிகள்
சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆவணப்படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய பரபரப்பான காணொலியும் இணைக்கப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் 12 வயது மகனாக பாலச்சந்திரன் மிக நெருக்கமாக வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று ஒளிபரப்பப் போவதாகவும் சனல் 4 அறிவித்திருந்தது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய காணொலியில், உள்ள காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பௌன்டர்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்துள்ளது.
அதில் பிரபாகரனின் தலையில் பலத்த காயம் காணப்படுகிறது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம்.
பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றார்.
போர் முடிந்த ஓரிரு நாள்களில் இதுதான் பிரபாகரன் உடல் என்று கூறி ஒரு காணொலியையும், புகைப்படங்களையும் இலங்கை இராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.
முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். அத்துடன் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆவணப் படத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான காணொலி இணைக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply