வன்னிப் பகுதியில் மக்கள் வாழ முடியாத நிலை தோன்றியுள்ளது
அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு ஏற்ற விதத்திலான தீர்வைக் காண அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் மட்டுமல்ல இன்றும் நாட்டுக்குள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அகலவத்த, மீகாதென்ன மற்றும் புளத்சிங்கள, வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் நடைபெற்ற ஐ.தே.க.வின் செயற்பாட்டாளருடனான சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர்,
அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த கொலன்னாவை பிரதேச சபைத் தலைவரை வெள்ளை வேனில் கடத்திய செய்தியை பார்த்தோம். அரசாங்கம், அரசாங்கத்தை சார்ந்தோரையே வெள்ளை வேனில் கடத்தும் நிலைமை இன்று நாட்டில் உருவாகியுள்ளது.
இவ்வாறு காட்டுத் தர்பார் நடத்தும் ஆட்சி அரசாங்கம் உலகில் எந்தவொரு நாட்டிலும் கிடையாது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்த பின்னரும் அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்வை இதுவரையில் வழங்கவில்லை.
அரசியல் தீர்வு கிடைக்குமென்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியாகியுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை நோக்கிச் செல்ல தயாராக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பாக எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு அதிலுள்ள குறைபாடுகளை சரி செய்து கொண்டு தீர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னகர்வுகள் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாரில்லை.
ஐ.நா.வின் உறுப்பு நாடான நாம் அதன் மனித உரிமை பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தவும் இணங்கியுள்ளோம். எனவே, இதிலிருந்து விடுபட எம்மால் முடியாது.
அதேபோன்று சர்வதேச அரசியல் மற்றும் சிவில் உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டுள்ளோம். எனவே, அதனை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு எமக்குள்ளது. இவற்றிலிருந்து விடுபட்டு செயல்பட முடியாது.
யுத்தம் முடிந்த பின்னரும் மனித உரிமைகள் மீறப்படுவதாக இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதன் போது ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை வந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணைகள் செய்யப்படுமென இரு தரப்பினரும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
இதன் பின்னர் ஒரு வருடம் கழித்து நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால், இதன் நடவடிக்கைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்யவில்லை. எனவே, ஐ.நா. செயலாளர் நாயகம் தருஷ்மன் ஆணைக்குழுவை நியமித்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தார். தருஷ்மன் குழுவின் அறிக்கையே முதலில் வெளிவந்தது. இதன்போது நாமனைவரும் ஒன்றுபட்டு தீர்வைக் காண வேண்டுமெனத் தீர்மானித்தோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும் இதனை ஏற்றுக்கொள்வதாகவும் அனைத்து தரப்பினரும் இவ் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அரசியல் பேதமின்றி உதவ வேண்டுமென்றும் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
கடந்த சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி தமதுரையில் இவ் அறிக்கையினை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இந்த நிலையில் ஐ.தே. கட்சியும் இதன் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு பெரும்பாலான விடயங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க தயாரென்றும் தெரிவித்தோம்.
இதேபோன்று கூட்டமைப்பினரும் ஒரு பகுதியினை எதிர்த்த போதும் மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பிலான பரிந்துறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரமல்ல பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு ஏற்ற விதத்திலான தீர்வை காண்பதே எமது நிலைப்பாடாகும்.
யுத்தத்தினால் அனைவரும் கஷ்டப்பட்டனர். ஆனால் தமிழ் மக்களே அதிகளவில் துன்பங்களை அனுபவித்தனர். இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அடக்குமுறை புகுந்துள்ளது. இதனால் குழப்பகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அச்சம் தோன்றியுள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் மக்கள் வாழ முடியாத நிலை தோன்றியுள்ளது. எமக்குள்ள பிரச்சினைகளை விட அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மண்ணெண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இம்மக்கள் எப்படி வாழ்வார்கள். தெற்கைப் போன்று வட பகுதி மக்களும் பெரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காணும் போது இலங்கையின் தனித்துவம் மேலும் மேலும் பலமடையும். இறையாண்மையின் அதிகாரம் இலங்கை மக்களுக்கே உள்ளது. இதிலிருந்து விடுபட வேண்டிய தேவை இல்லை.
இவ்வாறான சூழ்நிலைகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது. ஜெனீவாவிற்கு செல்வதற்கான தேவை ஐ.தே.கட்சிக்கு கிடையாது. அது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமென நாம் கூறவில்லை. எனவே, நாட்டின் கௌரவமும் மகிந்த ராஜபக்ஷவின் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது வேறுபட்ட தனிப்பட்ட விடயங்களாகும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குள் அல்ல எமது பலம் இறையாண்மை இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply