போர் குற்றங்கள்:சர்வதேச நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு
காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா, போர் குற்றங்கள் புரிந்தார் என்று தீர்ப்பு வந்துள்ளது. தி ஹேகிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நிலையில் வழங்கியுள்ள முதல் தீர்ப்பில் தாம்ஸ் லுபாங்கா குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது.
பதினைந்து வயதுக்கு கீழேயுள்ள சிறார்களை படைகளில் சேர்த்து அவர்களை சிறார் போராளிகளாக பயன்படுத்தினார் என்பதான குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று நீதிபதி அட்ரியன் ஃபுல்போர்ட் தீர்ப்பளித்தார்.
எனினும் இப்படியான ஒரு தீர்ப்பு வருவதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன என்று பிபிசியின் உலக விவகாரச் செய்தியாளர் பீட்டர் பைல்ஸ் கூறுகிறார்.
“யூபிசி மற்றும் FPள்C ஆகிய அமைப்புகள் 15 வயதுக்கு கீழேயுள்ள சிறார்களை படைகளில் சேர்த்தார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமின்றி இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது. அப்படி சேர்க்கப்பட்டவர்கள் யுத்தம் உட்பட பல மோதல்களில் தீவிரமாக பங்கேற்க வைக்கப்பட்டார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த சிறார்கள் படை வீர்ர்களாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லுபாங்கா உட்பட மூத்த அதிகாரிகளுக்கு பாதுகாவலர்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்”. என்று தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
குற்றச்சாட்டப்பட்டுள்ள லுபாங்கா யூபிசி மற்றும் FPள்C ஆகிய அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தாமஸ் லுபாங்கா யூபிசி மற்றும் FPள்C ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்தார். மேலும் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் அவர் அந்தப் படைகளுக்கு தலைவராக மட்டுமல்லாமல், அதன் அரசியல் தலைவராகவும் இருந்தார் என்பதும் உறுதியாகிறது. அந்த அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து நடத்தும் அனைத்து அதிகாரங்களுக்கும் அவரிடமே இருந்தன. அமைப்பின் அனைத்து நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அவருக்கு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டன”.
கடும் விமர்சனம்
இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடுவது முதல் அதற்கு தேவையான உதவிகளையும் ஒருங்கிணைப்பது ஆகிய அனைத்திலும் லுபாங்காவுக்கு முக்கிய பங்கு இருந்தது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
அதாவது ஆயுதங்கள் வாங்குவது, உணவு ஏற்பாடு செய்வது போன்று படைத்துருப்புகளுக்கு வேண்டிய அனைத்து முக்கிய செயல்பாடுகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்று கூறியுள்ள நீதிபதி தமது படைகளுக்கு ஆட்களை சேர்ப்பது தொடரில் அவர் நேரடியாக முடிவுகளை எடுத்தார் என்றும், உதாரணமாக உள்ளூர் மக்கடையே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் உரையாற்றியுள்ளார் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்குப் பகுதியில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உக்கிரமான இனமோதல்கள் வெடித்தபோது, இந்தக் குற்றங்கள் இடம்பெற்றன.
பின்னொரு நாள் நடைபெறும் ஒர் அமர்வில் நீதிபதிகள் தாமஸ் லுபாங்ககாவுக்கான தண்டனையை அறிவிப்பார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply